/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
தங்கம் பறிப்பு ஏன்: ஈரான் வீரர் தகுதி நீக்கம்
/
தங்கம் பறிப்பு ஏன்: ஈரான் வீரர் தகுதி நீக்கம்
ADDED : செப் 08, 2024 11:43 PM

பாரிஸ் பாராலிம்பிக் ஈட்டி எறிதலில் (உயரம் குறைந்தவருக்கான எப்41 பிரிவு) இந்திய வீரர் நவ்தீப் சிங்கிற்கு தங்கம் தேடி வந்தது. 47.32 மீ., துாரம் எறிந்த இவர், இரண்டாவது இடத்துக்கான வெள்ளி தான் வென்றார். ஆனால், முதலிடம் பிடித்த ஈரானின் பெய்ட் சாயா சதேக் (47.64 மீ.,) தகுதி நீக்கம் செய்யப்பட, நவ்தீப் சிங்கிற்கு தங்கம் வழங்கப்பட்டது. சீனாவின் பெங்சியாங் (44.72 மீ.,) வெள்ளி, ஈராக்கின் வில்டான் (40.46 மீ.,) வெண்கலம் வென்றனர்.
பாராலிம்பிக் விதியை மீறிய சதேக், தங்கத்தை பரிதாபமாக இழந்தார். முதலிடம் பிடித்த மகிழ்ச்சியில், சிவப்பு நிறத்தில் அரேபிய மொழியில் வாசகம் எழுதப்பட்ட கொடியை எடுத்து காண்பித்தார். தங்களது நாட்டுக் கொடியை தவிர வேறு கொடியை காண்பிப்பது தவறு. இதன் காரணமாக தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இவரது 'அப்பீல்' நிராகரிக்கப்பட்டது.
சதேக் கூறுகையில்,''இதே கொடியை டோக்கியோ பாராலிம்பிக் போட்டியின் (2021) போது காண்பித்தேன். அப்போது பிரச்னை எழவில்லை. இப்போது தங்கத்தை பறித்துவிட்டனர்,''என்றார்.
நவ்தீப் கூறுகையில்,''தகுதி நீக்கம் செய்யப்பட்ட செய்தியை கேட்டு சதேக் அழுதார். அவருக்கு ஆறுதல் சொனனேன்,''என்றார்.