ADDED : டிச 23, 2025 11:30 PM

ரோம்: இத்தாலியின் மிலன், கோர்டினா நகரங்களில் அடுத்த ஆண்டு (பிப். 6--22) குளிர்கால ஒலிம்பிக் போட்டி நடக்கவுள்ளது. இதற்கான ஜோதி இத்தாலியின் 110 மாகாணங்களில் 12,000 கி.மீ., உலா வர உள்ளது. பிப்.6ல் மிலன் சான் சிரோ மைதானத்தில் நடக்கும் துவக்க விழாவில் ஏற்றப்படும். நேற்று பாரம்பரிய பொம்பெயி நகர பகுதியில் ஒலிம்பிக் ஜோதியை பிரபல நடிகர் ஜாக்கி சான் ஏந்தி வந்தார்.
நெய்மருக்கு 'ஆப்பரேஷன்'
சாவ் பாலோ: பிரேசில் கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் நெய்மர், 33. நீண்ட காலமாக இடது முழங்கால் காயத்தால் அவதிப்பட்டு வருகிறார். வலி அதிகரிக்கவே, இவருக்கு நவீன 'ஆர்த்ரோஸ்கோபி' முறையில் 'ஆப்பரேஷன்' செய்யப்பட்டது. இதிலிருந்து விரைவில் மீளும் பட்சத்தில், அடுத்த ஆண்டு நடக்கும் உலக கோப்பை கால்பந்து தொடரில் பங்கேற்கலாம்.
முந்தும் இந்தியா
புதுடில்லி: பெல்ஜியம், நெதர்லாந்தில் அடுத்த ஆண்டு உலக கோப்பை ஹாக்கி தொடர் (ஆக. 14-30) நடக்க உள்ளது. இதில் இந்தியா, ஜெர்மனி, அர்ஜென்டினா உட்பட 16 அணிகள் பங்கேற்கின்றன. பெல்ஜியம் அணியின் தற்காப்பு பகுதி வீரர் ஆர்தர் வான் டோரன் கூறுகையில்,''கோப்பை வெல்லக்கூடிய அணிகள் வரிசையில் இந்தியா முன்னிலையில் உள்ளது. உலகின் சிறந்த அணிகள் மோத இருப்பதால், விறுவிறுப்பான போட்டிகளை எதிர்பார்க்கலாம்,''என்றார்.
* மும்பையில் குளோபல் செஸ் லீக் தொடரின் 3வது சீசன் நடந்தது. மொத்தம் ஆறு அணிகள் பங்கேற்றன. பைனலில் பிரக்ஞானந்தா இடம் பெற்ற ஆல்பைன் எஸ்.ஜி.பைபர்ஸ் அணி, திரிவேணி அணியை வீழ்த்தி சாம்பியன் ஆனது.
* இந்தியாவில் பெண்கள் பிரிமியர் லீக் 'டி-20' தொடர், 2026, ஜன. 9ல் துவங்குகிறது. தொடர்ந்து மூன்று முறை பைனலுக்கு முன்னேறிய டில்லி அணிக்கு, இம்முறை இந்திய வீராங்கனை ஜெமிமா 25, கேப்டனாக நியமிக்கப்பட்டார். இதுவரை 27 போட்டியில் 507 ரன் எடுத்துள்ளார்.
* ஆஸ்திரேலியாவில் 'பிக் பாஷ்' லீக் 'டி-20' தொடர் நடக்கிறது. நேற்று அடிலெய்டில் நடந்த போட்டியில் மெல்போர்ன் அணி (161/4), அடிலெய்டு அணியை (155/8) 6 விக்கெட்டில் வீழ்த்தியது.
* டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடரின் முதல் சுற்று தகுதி போட்டிகள், 2026, பிப். 7, 8ல் பெங்களூருவில் நடக்க உள்ளது. இதற்கான இந்திய அணியில் இருந்து ஸ்ரீராம் பாலாஜி நீக்கப்பட்டார்.
* ஹாக்கி இந்தியா லீக் பெண்களுக்கான தொடர், டிச. 28ல் ராஞ்சியில் துவங்குகிறது. ராஞ்சியில் நடக்கும் முதல் போட்டியில் ராஞ்சி ராயல்ஸ், பைப்பர்ஸ் அணிகள் மோத உள்ளன. இதில் பங்கேற்கும் சூர்மா கிளப் அணி கேப்டனாக, கோல் கீப்பர் சவிதா நியமிக்கப்பட்டார்.

