/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
சென்னையில் உலக செஸ் * இந்தியா விருப்பம்
/
சென்னையில் உலக செஸ் * இந்தியா விருப்பம்
ADDED : மே 29, 2024 10:49 PM

புதுடில்லி: செஸ் உலக சாம்பியன்ஷிப் போட்டியை நடந்த இந்தியா விருப்பம் தெரிவித்துள்ளது. அனுமதி கிடைக்கும் பட்சத்தில் சென்னையில் போட்டி நடக்கலாம்.
சர்வதேச செஸ் கூட்டமைப்பு (பிடே) சார்பில் உலக சாம்பியன்ஷிப் போட்டி வரும் நவ. 20 முதல் டிச. 15 வரை நடத்தப்பட வாய்ப்புள்ளது. நடப்பு சாம்பியன் டிங் லிரெனுடன் 31, (சீனா), கேண்டிடேட்ஸ் தொடரில் சாதித்த இந்திய இளம் வீரர் குகேஷ் 17, மோத உள்ளனர்.
மொத்தம் 25 நாள் நடக்கவுள்ள இப்போட்டிக்கு பட்ஜெட் ரூ. 71 கோடி, தவிர 'பிடே' அமைப்புக்கு ரூ.9 கோடி கட்டணம் என மொத்தம் ரூ. 80 கோடி வரை தேவைப்படுகிறது.
தொடரை நடத்த விரும்பும் நாடுகள் மே 31க்குள், விண்ணப்பிக்க வேண்டும். இத்தொடரை இந்தியாவில் நடத்த அகில இந்திய செஸ் கூட்டமைப்பு முயற்சி செய்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக தமிழக அரசு சார்பில் தொடரை நடத்த விருப்பம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக செஸ் நடத்தவதற்காக ஏலத்தில் சிங்கப்பூர் பங்கேற்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இதுவரை முறைப்படி எவ்வித வேண்டுகோளும் விடுக்கப்படவில்லை.
ஜூலை 1ல் போட்டி நடக்கும் இடம் அறிவிக்கப்பட உள்ளது. ஒருவேளை தமிழக அரசு கோரிக்கை ஏற்கப்படும் பட்சத்தில் உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி, சென்னையில் நடக்கலாம்.
இதுகுறித்து சர்வதேச செஸ் கூட்டமைப்பு தலைமை செயல் அதிகாரி எமில் சடோவ்ஸ்கி கூறுகையில்,'' இந்தியாவில் இருந்து எங்களுக்கு விண்ணப்பம் வந்துள்ளது. வேறு யாரும் இதுவரை விருப்பம் தெரிவிக்கவில்லை. அடுத்த வாரம் நடக்கவுள்ள 'பிடே' கூட்டத்தில் தொடரை நடத்தும் இடம் குறித்து விவாதிக்க உள்ளோம்,'' என்றார்.
மூன்றாவது முறை
இந்தியாவில் இதற்கு முன் இரு முறை உலக செஸ் சாம்பியன்ஷிப் நடந்தது. கடந்த 2000ல் டில்லியில் நடந்த போட்டியில் இந்தியாவின் ஆனந்த், சாம்பியன் ஆனார். 2013ல் சென்னையில் நடந்த போட்டியில் ஆனந்த், நார்வேயின் கார்ல்சனிடம் தோல்வியடைந்தார். ஒருவேளை இம்முறை அனுமதி கிடைத்தால் மூன்றாவது முறையாக இந்தியாவில் உலக செஸ் நடக்கலாம்.