/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
உலக 'ரிலே': இந்தியா ஏமாற்றம்
/
உலக 'ரிலே': இந்தியா ஏமாற்றம்
ADDED : மே 05, 2024 11:06 PM

நிசாவ்: உலக தடகள 'ரிலே' ஓட்டத்தில் இந்திய அணிகள் ஏமாற்றின.
பஹாமசில் உலக தடகள 'ரிலே' போட்டி (4x400 மீ., ஓட்டம்) நடக்கிறது. இது, பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கான தகுதிச் சுற்றாகும். கலப்பு அணிகளுக்கான தகுதிச் சுற்று-1ல் ராஜேஷ் ரமேஷ், ரூபல் சவுத்தரி, அவினாஷ் கிருஷ்ண குமார், ஜோதிகா ஸ்ரீ தண்டி ஆகியோர் அடங்கிய இந்திய அணி பங்கேற்றது. இலக்கை 3 நிமிடம், 20.36 வினாடியில் அடைந்த இந்திய அணி 6வது இடம் பிடித்து பைனலுக்கு தகுதி பெறத்தவறியது.
பெண்கள் அணிகளுக்கான தகுதிச் சுற்று-1ல் வித்யா ராம்ராஜ், பூவம்மா, ஜோதிகா ஸ்ரீ தண்டி, சுபா வெங்கடேசன் ஆகியோர் அடங்கிய இந்திய அணி களமிறங்கியது. பந்தய துாரத்தை 3 நிமிடம், 29.74 வினாடியில் கடந்த இந்திய அணி 5வது இடம் பிடித்து பைனல் வாய்ப்பை இழந்தது.
ஆண்கள் அணிகளுக்கான தகுதிச் சுற்று-1ல் முகமது அனாஸ், அமோஜ் ஜேக்கப், முகமது அஜ்மல், ராஜேஷ் ரமேஷ் ஆகியோர் அடங்கிய இந்திய அணி பங்கேற்றது.
முதலில் ஓடிய அனாஸ், 45.93 வினாடியில் இலக்கை அடைந்தார். அடுத்து ஓடிய ராஜேஷ் ரமேஷின் இடது காலில் காயம் ஏற்பட இந்திய அணி பாதியில் விலகியது.
தகுதிச் சுற்று-1ல் ஒவ்வொரு பிரிவிலும் 'டாப்-2' இடம் பிடித்த அணிகள் பைனலுக்கு முன்னேறியது மட்டுமின்றி பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கும் தகுதி பெற்றன.
மூன்று பிரிவிலும் ஏமாற்றிய இந்திய அணிகள் பைனலுக்குள் நுழையவில்லை. இருப்பினும் தகுதிச் சுற்று-2ல் சிறப்பாக செயல்படும் பட்சத்தில் பாரிஸ் ஒலிம்பிக்கில் விளையாடும் வாய்ப்பை பெறலாம்.