ADDED : ஆக 18, 2025 10:06 PM

இத்தாலி கலக்கல்
சுரபயா:
இந்தோனேஷியாவில் நடந்த பெண்களுக்கான (21 வயது) உலக வாலிபால் சாம்பியன்ஷிப்
பைனலில் ஜப்பான், இத்தாலி அணிகள் மோதின. இத்தாலி அணி 3-2 என்ற கணக்கில்
வெற்றி பெற்று 3வது முறையாக கோப்பை வென்றது.
ஜெர்மனி சாம்பியன்
கெய்ரோ: எகிப்தில் நடந்த உலக ஹேண்ட்பால் சாம்பியன்ஷிப் (19 வயது) பைனலில் ஸ்பெயின், ஜெர்மனி அணிகள் மோதின. கூடுதல் நேர முடிவில் போட்டி 36-36 என சமநிலை வகித்தது. 'பெனால்டி த்ரோ'வில் அசத்திய ஜெர்மனி 41-40 என 'திரில்' வெற்றி பெற்று சாம்பியன் ஆனது.
குரோஷியா ஏமாற்றம்
மியோவெனி: ருமேனியாவில் நடக்கும் பெண்களுக்கான (16 வயது) 'யூரோ' கூடைப்பந்து லீக் போட்டியில் குரோஷிய அணி 48-66 என்ற கணக்கில் இத்தாலியிடம் தோல்வியடைந்தது. மற்றொரு போட்டியில் இஸ்ரேல் அணி 72-96 என ஜெர்மனியிடம் வீழ்ந்தது.
நெதர்லாந்து ஆதிக்கம்
மான்செங்கிளாட்பாக்: ஜெர்மனியில் நடந்த பெண்களுக்கான 'யூரோ' ஹாக்கி சாம்பியன்ஷிப் பைனலில் ஜெர்மனி, நெதர்லாந்து அணிகள் மோதின. நெதர்லாந்து அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று, 13வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி ஆதிக்கம் செலுத்தியது.
எக்ஸ்டிராஸ்
* பஞ்சாப்பின் ஜலந்தரில் நடக்கும் ஜூனியர் தேசிய ஹாக்கி சாம்பியன்ஷிப் லீக் போட்டியில் மத்திய பிரதேசம், தமிழகம் அணிகள் மோதின. இப்போட்டி 3-3 என 'டிரா' ஆனது.
* லடாக் மாரத்தான் ஓட்டத்தின் 12வது சீசன் வரும் செப். 11-14ல் நடக்கவுள்ளது. இதில் 30 நாடுகளை சேர்ந்த, 6000க்கு மேற்பட்ட வீரர், வீராங்கனைகள், 6 வகையான பிரிவுகளில் பங்கேற்க உள்ளனர்.
* ஆமதாபாத் மாரத்தான் 9வது சீசன் வரும் நவ. 30ல் நடக்கவுள்ளது. இதில் மாரத்தான், பாதி மாரத்தான், 10 கி.மீ., ஓட்டம், 5 கி.மீ., ஓட்டம் என 4 வகையான பிரிவுகளில் போட்டிகள் நடக்கவுள்ளன.
* வரும் அக்டோபரில் நடக்கவுள்ள வில்வித்தை பிரிமியர் லீக் முதல் சீசனில் தீபிகா குமாரி, ஜோதி சுரேகா, அபிஷேக் வர்மா உள்ளிட்ட முன்னணி இந்திய நட்சத்திரங்கள் பங்கேற்க உள்ளனர்.