ADDED : ஆக 29, 2025 10:38 PM

மெஸ்ஸி 'குட் பை'
பியுனஸ் ஏர்ஸ்: அர்ஜென்டினாவில் வரும் செப். 4ல் நடக்கவுள்ள உலக கோப்பை கால்பந்து (2026), தென் அமெரிக்க தகுதிச் சுற்றில் அர்ஜென்டினா, வெனிசுலா அணிகள் மோதுகின்றன. உலக கோப்பை தொடருக்கு பின், அர்ஜென்டினா நட்சத்திர வீரர் மெஸ்ஸி ஓய்வு பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே இது, சொந்த மண்ணில் மெஸ்ஸி பங்கேற்கும் கடைசி சர்வதேச போட்டியாக இருக்கலாம்.
காலிறுதியில் நெதர்லாந்து
பாங்காக்: தாய்லாந்தில் நடக்கும் பெண்களுக்கான உலக வாலிபால் சாம்பியன்ஷிப் 'ரவுண்டு-16' போட்டியில் நெதர்லாந்து, செர்பியா அணிகள் மோதின. அபாரமாக ஆடிய நெதர்லாந்து அணி 3-2 (27-25, 26-24, 22-25, 20-25, 15-11) என்ற கணக்கில் வெற்றி பெற்று, காலிறுதிக்கு முன்னேறியது.
அமெரிக்கா அசத்தல்
ஜியாங்மென்: சீனாவில் நடக்கும் உலக வாலிபால் சாம்பியன்ஷிப் (21 வயது) காலிறுதியில் பிரான்ஸ், அமெரிக்கா அணிகள் மோதின. இதில் அமெரிக்க அணி 3-2 (21-25, 25-17, 22-25, 25-23, 15-12) என வெற்றி பெற்றது. மற்றொரு காலிறுதியில் ஈரான் அணி 3-0 என, சீனாவை வீழ்த்தியது.
ஜெர்மனி கலக்கல்
டாம்பியர்: பின்லாந்தில் நடக்கும் 'யூரோ' கூடைப்பந்து 42வது சீசனுக்கான லீக் போட்டியில் ஜெர்மனி, சுவீடன் அணிகள் மோதின. இதில் ஜெர்மனி அணி 105-83 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. ஏற்கனே மான்டினேக்ரோ அணியை வீழ்த்திய ஜெர்மனி, தொடர்ந்து 2வது வெற்றியை பதிவு செய்தது.
எக்ஸ்டிராஸ்
* ஆமதாபாத்தில் நடக்கும் காமன்வெல்த் பளுதுாக்குதல் சாம்பியன்ஷிப் 94 கிலோ பிரிவில் இந்திய வீரர் தில்பாக் சிங் வெள்ளி வென்றார்.
* மும்பையில், அடுத்த ஆண்டு (ஆக. 3-9) உலக பல்கலை., ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் தொடர் நடக்கவுள்ளது.
* சீனாவில் நடந்த 'பெல்ட் அண்டு ரோடு' சர்வதேச யூத் குத்துச்சண்டை தொடரில் இந்தியாவுக்கு 7 தங்கம், 7 வெள்ளி, 12 வெண்கலம் என 26 பதக்கம் கிடைத்தது.
* டில்லியில் நடக்கவுள்ள வில்வித்தை பிரிமியர் லீக் முதல் சீசனில் (அக். 2-12) தென் கொரிய நட்சத்திரங்கள் பங்கேற்கவில்லை. சீனாவில் நடக்கவுள்ள உலக கோப்பை பைனலுக்கு (அக். 17-19) தயாராக பிரிமியர் லீக்கில் விளையாடவில்லை.
* வரும் 2030ல் ஆமதாபாத்தில் காமன்வெல்த் விளையாட்டு போட்டியை நடத்திட மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதனையடுத்து, இந்திய காமன்வெல்த் விளையாட்டு சங்கம், குஜராத் மாநில அரசு சார்பில் காமன்வெல்த் விளையாட்டு கூட்டமைப்பிடம் முறைப்படி விண்ணப்பிக்கப்பட்டது.

