ADDED : செப் 08, 2025 09:13 PM

இத்தாலி 'சாம்பியன்'
பாங்காக்: தாய்லாந்தில் நடந்த பெண்களுக்கான உலக வாலிபால் சாம்பியன்ஷிப் பைனலில் இத்தாலி, துருக்கி அணிகள் மோதின. இதில் இத்தாலி அணி 3-2 (25-22, 13-25, 26-24, 19-25, 15-8) என்ற கணக்கில் வெற்றி பெற்று, 2வது முறையாக கோப்பை வென்றது.
பிரான்ஸ் 'ஹாட்ரிக்'
லண்டன்: இங்கிலாந்தில் நடக்கும் பெண்களுக்கான உலக கோப்பை ரக்பி லீக் போட்டியில் பிரான்ஸ் அணி 57-10 என்ற கணக்கில் தென் ஆப்ரிக்காவை வீழ்த்தியது. ஏற்கனவே இத்தாலி, பிரேசிலை வென்ற பிரான்ஸ், 'ஹாட்ரிக்' வெற்றியுடன் காலிறுதிக்குள் நுழைந்தது.
காலிறுதியில் ஜார்ஜியா
ரிகா: லாட்வியாவில் நடக்கும் 'யூரோ' கூடைப்பந்து 'ரவுண்டு-16' போட்டியில் ஜார்ஜியா அணி 80-70 என்ற கணக்கில் பிரான்சை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது. மற்றொரு போட்டியில் பின்லாந்து அணி 92-86 என, செர்பியாவை தோற்கடித்தது.
ஸ்பெயின் கலக்கல்
ஜிரா: மால்டாவில் நடந்த பெண்களுக்கான (18 வயது) ஐரோப்பிய வாட்டர் போலோ சாம்பியன்ஷிப் பைனலில் ஸ்பெயின், கிரீஸ் அணிகள் மோதின. இதில் ஸ்பெயின் அணி 10-9 என்ற கணக்கில் வெற்றி பெற்று, 3வது முறையாக கோப்பை வென்றது.
எக்ஸ்டிராஸ்
* ஹாங்காங் ஓபன் 'சூப்பர் 500' பாட்மின்டன் தொடர் இன்று துவங்குகிறது. இதில் சாத்விக்சாய்ராஜ், சிராக் ஷெட்டி, சிந்து, ஆயுஷ் ஷெட்டி, லக்சயா சென், பிரனாய் உள்ளிட்ட இந்திய நட்சத்திரங்கள் பங்கேற்கின்றனர்.
* தென் கொரியாவில் நடக்கும் உலக வில்வித்தை சாம்பியன்ஷிப், தனிநபர் 'காம்பவுண்டு' பிரிவு காலிறுதியில் இந்திய வீரர்களான ரிஷாப் யாதவ், அமன் சைனி, பிரதமேஷ் தோல்வியடைந்தனர்.
* கடந்த ஆகஸ்ட் மாதத்தின் சிறந்த வீரருக்கான ஐ.சி.சி., விருதுக்கு இந்திய வேகப்பந்துவீச்சாளர் முகமது சிராஜ், நியூசிலாந்தின் மாட் ஹென்றி, வெஸ்ட் இண்டீசின் ஜெய்டன் சீல்ஸ் பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர்.
* துலீப் டிராபி கிரிக்கெட் பைனலில் (எதிர்: தெற்கு மண்டலம், செப். 11-15, பெங்களூரு) விளையாடும் மத்திய மண்டல அணியில் ஹர்ஷ் துபே, கலீல் அகமது, மானவ் சுதார் ஆகியோருக்கு பதிலாக குமார் கார்த்திகேய சிங், குல்தீப் சிங், அஜய் சிங் குக்னா தேர்வாகினர்.