ADDED : டிச 25, 2025 09:18 PM

ஜிடேன் மகன் அறிமுகம்
ரபாட்: மொராக்கோவில், ஆப்ரிக்க கோப்பை கால்பந்து 35வது சீசன் நடக்கிறது. லீக் போட்டியில் அல்ஜீரியா அணி 3-0 என சூடானை வீழ்த்தியது. இப்போட்டியில் அல்ஜீரியா அணியில் கோல்கீப்பராக அறிமுகமான லுாகா ஜிடேன் 27, முன்னாள் பிரான்ஸ் வீரர் ஜினெடின் ஜிடேனின் 53, மகன் ஆவார். தனது மகன் விளையாடியதை ஜினெடின் ஜிடேன் நேரில் பார்த்து ரசித்தார்.
துபாய் அணி முன்னேற்றம்
துபாய்: ஐக்கிய அரபு எமிரேட்சில் நடக்கும் சர்வதேச 'டி-20' லீக் தொடருக்கான லீக் போட்டியில் துபாய் கேபிடல்ஸ் அணி (138/4) 6 விக்கெட் வித்தியாசத்தில் சார்ஜா வாரியர்ஸ் அணியை (134/8) வீழ்த்தியது. இதுவரை விளையாடிய 9 போட்டியில், 5 வெற்றி, 4 தோல்வி என 10 புள்ளிகளுடன் 'நடப்பு சாம்பியன்' துபாய் அணி 'பிளே-ஆப்' சுற்றுக்குள் நுழைந்தது.
கேப்டவுன் அணி சாதிக்குமா
கேப்டவுன்: தென் ஆப்ரிக்காவில், 'எஸ்.ஏ.20' தொடரின் ('டி-20') 4வது சீசன் இன்று துவங்குகிறது. 'நடப்பு சாம்பியன்' கேப்டவுன், ஜோகனஸ்பர்க், டர்பன் உள்ளிட்ட 6 அணிகள் பங்கேற்கின்றன. ரஷித் கான் தலைமையில் களமிறங்கும் கேப்டவுன் அணி, இம்முறை அசத்தினால் மீண்டும் கோப்பை வெல்லலாம். ஜோனஸ்பர்க் அணிக்கு டுபிளசி முதல் கோப்பை வென்று தர முயற்சிக்கலாம்.
எக்ஸ்டிராஸ்
* கத்தார் தலைநகர் தோகாவில், உலக ரேபிட், பிளிட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் தொடர் இன்று துவங்குகிறது. இந்தியா சார்பில் குகேஷ், பிரக்ஞானந்தா, அர்ஜுன் எரிகைசி, ஹம்பி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
'நடப்பு உலக சாம்பியன்' குகேஷ் கூறுகையில், ''ரேபிட், பிளிட்ஸ் போட்டிகளை விட கிளாசிகல் போட்டிக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கிறேன். எனவே இத்தொடரில் என் மீது அதிக எதிர்பார்ப்பு வேண்டாம். அனுபவத்திற்காகவும், மகிழ்ச்சியாக விளையாடுவதற்கு மட்டும் தான் இங்கு வந்துள்ளேன்,'' என்றார்.
* ஐ.சி.சி., 'டி-20' பேட்டர் தரவரிசையில் இந்தியாவின் திலக் வர்மா, 3வது இடத்துக்கு முன்னேறினார். இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ், 10வது இடத்தில் இருந்து 13வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.
* ஆமதாபாத்தில் இன்று நடக்கவுள்ள விஜய் ஹசாரே டிராபி கிரிக்கெட் தொடருக்கான 'ஏ' பிரிவு லீக் போட்டியில் தமிழகம், மத்திய பிரதேசம் அணிகள் மோதுகின்றன. தமிழக அணி, தனது முதல் போட்டியில் புதுச்சேரி அணியை வீழ்த்தியது.

