ADDED : ஜன 21, 2026 10:09 PM

பைனலில் ஜப்பான்
ரியாத்: சவுதி அரேபியாவில், 23 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆசிய கோப்பை கால்பந்து 7வது சீசன் நடக்கிறது. அரையிறுதியில் ஜப்பான், தென் கொரியா அணிகள் மோதின. இதில் ஜப்பான் அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. மற்றொரு அரையிறுதியில் சீன அணி 3-0 என்ற கோல் கணக்கில் வியட்நாமை தோற்கடித்தது. பைனலில் (ஜன. 24), ஜப்பான்-சீனா அணிகள் மோதுகின்றன.
பஹ்ரைன் 'ஹாட்ரிக்'
சபா அல்-சலேம்: குவைத்தில், ஆசிய ஹேண்ட்பால் சாம்பியன்ஷிப் 22வது சீசன் நடக்கிறது. லீக் போட்டியில் பஹ்ரைன், ஈராக் அணிகள் மோதின. பஹ்ரைன் அணி 34-18 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. ஏற்கனவே ஜோர்டான், சீனாவை வென்ற பஹ்ரைன் அணி 'ஹாட்ரிக்' வெற்றி பெற்றது. மற்றொரு லீக் போட்டியில் தென் கொரிய அணி 32-21 என, கத்தாரை வீழ்த்தி, 2வது வெற்றியை பதிவு செய்தது.
இலங்கை ஏமாற்றம்
பாங்காக்: தாய்லாந்தில், பெண்களுக்கான தெற்காசிய புட்சல் கால்பந்து சாம்பியன்ஷிப் முதல் சீசன் நடக்கிறது. லீக் போட்டியில் இலங்கை, வங்கதேசம் அணிகள் மோதின. இதில் இலங்கை அணி 3-6 என்ற கோல் கணக்கில் தோல்விடைந்தது. இதுவரை விளையாடிய 4 போட்டியில், 3 வெற்றி, ஒரு 'டிரா' என 10 புள்ளிகளுடன் வங்கதேச அணி முதலிடத்தில் உள்ளது.
எக்ஸ்டிராஸ்
* ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் இன்று துவங்கவுள்ள ரஞ்சி கோப்பை கிரிக்கெட் லீக் போட்டியில் தமிழகம், ஒடிசா அணிகள் விளையாடுகின்றன. ராஜ்கோட்டில் துவங்கும் போட்டியில் பஞ்சாப், சவுராஷ்டிரா அணிகள் மோதுகின்றன. பஞ்சாப் அணி சுப்மன் கில் தலைமையில் களமிறங்குகிறது.
* பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடருக்கான கோல்கட்டா அணியின் பீல்டிங் பயிற்சியாளராக, முன்னாள் விக்கெட் கீப்பர் பேட்டர் திஷாந்த் யாக்னிக் நியமிக்கப்பட்டுள்ளார்.
* டில்லியில், தேசிய துப்பாக்கிசுடுதல் தகுதிப் போட்டி நடக்கிறது. பெண்களுக்கான 50 மீ., 'ரைபிள்-3 பொசிஷன்ஸ்' பிரிவில் திலோத்தமா சென் முதலிடம் பிடித்தார். இதன் ஆண்கள் பிரிவில் ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர் முதலிடம். பெண்களுக்கான 25 மீ., 'பிஸ்டல்' பிரிவில் மனு பாகர் முதலிடத்தை கைப்பற்றினார்.
