ADDED : ஜன 29, 2026 10:01 PM

ரியல் மாட்ரிட் ஏமாற்றம்
லிஸ்பன்: போர்ச்சுகல் தலைநகர் லிஸ்பனில் நடந்த ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடருக்கான லீக் போட்டியில் ரியல் மாட்ரிட் (ஸ்பெயின்) அணி 2-4 என, பென்பிகா (போர்ச்சுகல்) அணியிடம் தோல்வியடைந்தது. மாட்ரிட் அணிக்கு எம்பாப்வே 2 கோல் அடித்தார். லீக் சுற்றில் விளையாடிய 8 போட்டியில், 5 வெற்றி, 3 தோல்வி என, 15 புள்ளிகளுடன் 9வது இடம் பிடித்த ரியல் மாட்ரிட் அணி, நேரடியாக 'ரவுண்டு-16' போட்டிக்கு தகுதி பெறத்தவறியது.
அரையிறுதியில் குரோஷியா
மால்மோ: டென்மார்க், நார்வே, சுவீடனில், ஐரோப்பிய ஹேண்ட்பால் சாம்பியன்ஷிப் 17வது சீசன் நடக்கிறது. இதன் பிரதான சுற்று லீக் போட்டியில் குரோஷியா, ஹங்கேரி அணிகள் மோதின. இதில் குரோஷிய அணி 27-25 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. ஐந்து போட்டியில், 4 வெற்றி, ஒரு தோல்வி என, 8 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்த குரோஷியா, அரையிறுதிக்குள் நுழைந்தது.
ஆர்சனல் கோல் மழை
லண்டன்: இங்கிலாந்தில், பெண்களுக்கான சாம்பியன்ஸ் கோப்பை கிளப் கால்பந்து முதல் சீசன் நடக்கிறது. லண்டனில் நடந்த அரையிறுதியில் ஆர்சனல் (இங்கிலாந்து) அணி 6-0 என்ற கோல் கணக்கில் மொராக்கோவின் ராயல் ஆயுதப்படை விளையாட்டு சங்கம் (ஏ.எஸ். எப்.ஏ.ஆர்.,) அணியை வீழ்த்தியது. மற்றொரு அரையிறுதியில் கோரிந்தியன்ஸ் (பிரேசில்) அணி 1-0 என, கோதம் எப்.சி., அணியை (அமெரிக்கா) வீழ்த்தியது.
எக்ஸ்டிராஸ்
* நார்வே செஸ் தொடரில் (மே 25 - ஜூன் 5) இந்தியாவின் திவ்யா தேஷ்முக் 19, முதன்முறையாக பங்கேற்க உள்ளார். இத்தொடரில் விளையாடும் இளம் வீராங்கனை என்ற சாதனை படைக்க காத்திருக்கிறார்.
* ஒடிசா மாநிலம் ரூர்கேலாவில், புரோ லீக் ஹாக்கி தொடருக்கான போட்டிகள் (பிப். 10-15) நடக்கவுள்ளன. இதற்கான பயிற்சி முகாமில் (பிப். 1-7, ரூர்கேலா) பங்கேற்கும் 33 பேர் கொண்ட உத்தேச இந்திய வீரர்கள் பட்டியலில் மன்பிரீத் சிங் 33, இடம் பெறவில்லை.
* ஐ.எஸ்.எல்., கால்பந்து தொடருக்கான சென்னை அணியில், மொராக்கோ 'மிட்-பீல்டர்' முகமது அலி பெமம்பர் 36, ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். மொராக்கோ அணிக்காக 11 போட்டியில் (2 கோல்) விளையாடிய இவர், ஐ.எஸ்.எல்., அரங்கில் வடகிழக்கு யுனைடெட் அணிக்காக (2023-25, 43 போட்டி, 4 கோல்) பங்கேற்றுள்ளார்.
* ஜெர்மனியில் நடக்கும் மாஸ்டர்ஸ் ஸ்னுாக்கர் 2வது சுற்றில் இந்தியாவின் இஷ்பிரீத் சிங் சதா 5-3 என, இங்கிலாந்தின் எலியாட் ஸ்லெசரை தோற்கடித்தார்.
* அசாமில் நடக்கும் சந்தோஷ் டிராபி தேசிய கால்பந்து சாம்பியன்ஷிப் லீக் போட்டியில் கேரளா அணி 3-0 என, மேகாலயாவை வீழ்த்தியது. மற்றொரு போட்டியில் பஞ்சாப் அணி 1-0 என, சர்வீசஸ் அணியை வென்றது. ஒடிசா, ரயில்வே அணிகள் மோதிய போட்டி 1-1 என 'டிரா' ஆனது.
* முன்னாள் இந்திய ஹாக்கி அணியின் பயிற்சியாளர் (2011-13), ஆஸ்திரேலியாவை சேர்ந்த மைக்கேல் நோப்ஸ் 72, கேன்சர் பாதிப்பால் காலமானார். இவரது பயிற்சியின் கீழ் இந்திய அணி லண்டன் ஒலிம்பிக் போட்டிக்கு (2012) தகுதி பெற்றது.
