/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
பஜ்ரங் மீண்டும் 'சஸ்பெண்ட்'
/
பஜ்ரங் மீண்டும் 'சஸ்பெண்ட்'
ADDED : மே 09, 2024 10:56 PM

புதுடில்லி: ஊக்கமருந்து சோதனைக்கு மறுத்த பஜ்ரங் புனியாவை, உலக மல்யுத்த கூட்டமைப்பும் 'சஸ்பெண்ட்' செய்துள்ளது.
இந்திய மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா 30. டோக்கியோ ஒலிம்பிக் (2021) மல்யுத்தத்தில் (65 கிலோ பிரீஸ்டைல் பிரிவு) வெண்கலம் வென்றார். பாலியல் புகார் கூறப்பட்ட இந்திய மல்யுத்த கூட்டமைப்பு (டபிள்யு.எப்.ஐ.,) முன்னாள் தலைவர் பிரஜ் பூஷன் சரண் சிங்கிற்கு எதிராக போராடினார்.
துருக்கியில் நடக்கும் உலக மல்யுத்தம் ஒலிம்பிக் தகுதி போட்டியில் பங்கேற்க, ஹரியானாவின் சோனேபட்டில் நடந்த தகுதி போட்டியில் களமிறங்கினார். அப்போது, தேசிய ஊக்கமருந்து தடுப்பு மைய ('நாடா') சோதனைக்காக, சிறுநீர் மாதிரி வழங்க மறுத்தார்.
இது உலக ஊக்கமருந்து தடுப்பு மையத்தின் ('வாடா') விதிமுறைக்கு எதிரானது. இதனால் பஜ்ரங் புனியா, போட்டிகளில் பங்கேற்க 'நாடா' அமைப்பு தற்காலிக தடை (சஸ்பெண்ட்) விதித்தது. இதுகுறித்த விளக்கம் ஏற்றுக் கொள்ளப்பட்டால், துருக்கி போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பு இருந்தது.
இதனால் ரூ. 9 லட்சம் செலவில் பஜ்ரங் புனியா, ரஷ்யாவில் பயிற்சி செய்ய இந்திய விளையாட்டு ஆணையம் சார்பில் ஏற்பாடு செய்திருந்தது. இருப்பினும் தனது ரஷ்ய பயணத்தை ரத்து செய்தார்.
தற்போது, புதிய திருப்பமாக, உலக மல்யுத்த கூட்டமைப்பு, 2024 ம் ஆண்டு முழுவதும் பஜ்ரங் புனியாவை 'சஸ்பெண்ட்' செய்துள்ளது.
இதனால் மீண்டும் பஜ்ரங் புனியா பாரிஸ் ஒலிம்பிக் கனவுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
சுமித், அஷூ ஏமாற்றம்
துருக்கியில் உலக மல்யுத்தம் ஒலிம்பிக் தகுதி போட்டி நேற்று துவங்கியது. முதலில் கிரிகோ ரோமன் போட்டி நடக்கின்றன. 60 கிலோ பிரிவு தகுதிச்சுற்றில் இந்திய வீரர் சுமித், 0-10 என அர்னாட்டிடம் (ருமேனியா) வீழ்ந்தார். 67 கிலோ பிரிவில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்தியாவின் அஷூ, 0-10 என கிறிஸ்டியனிடம் (ஹங்கேரி) தோற்றார்.
இந்தியாவின் விகாஷ் (77 கிலோ) 0-8 என லுரியிடம் (ஜார்ஜியா) வீழ்ந்தார். சுனில் (87 கிலோ) 3-4 என ரபிக்கிடம் (அஜர்பெய்ஜான்) தோற்றார். இதையடுத்து பாரிஸ் ஒலிம்பிக் கிரிகோ ரோமன் பிரிவில் இந்திய வீரர்கள் யாரும் தகுதி பெறவில்லை.