ADDED : மே 10, 2024 10:02 PM

இஸ்தான்புல்: உலக மல்யுத்தம் ஒலிம்பிக் தகுதி அரையிறுதிக்கு நிஷா முன்னேறினார். இதில் வென்றால் ஒலிம்பிக்கில் பங்கேற்கலாம்.
துருக்கியில் உலக மல்யுத்தம் ஒலிம்பிக் தகுதி போட்டி நடக்கிறது. ஆண்களுக்கான கிரிகோ ரோமன் பிரிவில் இந்திய வீரர்கள் யாரும் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறவில்லை. நேற்று பெண்களுக்கான 'பிரீஸ்டைல்' போட்டிகள் நடந்தன. 68 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் நிஷா தாஹியா பங்கேற்றார். நேரடியாக காலிறுதிக்கு முந்தைய சுற்றில் களமிறங்கிய இவர், அல்பேனியானின் அலினா சாவ்சுக்கை 3-0 என வீழ்த்தினார்.
அடுத்து நடந்த காலிறுதியில் நிஷா, இத்தொடரின் 'நம்பர்-1' வீராங்கனை, செக் குடியரசின் அடேலா ஹன்ஸ்லிகோவாவுடன் மோதினார். சிறப்பாக செயல்பட்ட நிஷா 7-4 என்ற கணக்கில் வெற்றி பெற்று, அரையிறுதிக்குள் நுழைந்தார். இதில் ருமேனியாவின் அலெக்சாண்ட்ரா ஆல்கெலை எதிர்கொள்கிறார். இப்போட்டியில் வெற்றி பெற்று பைனலுக்கு முன்னேறினால், பாரிஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்க தகுதி பெறலாம்.
62 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் மான்சி, பெலாரசின் வெரானிகா இவனோவாவை சந்தித்தார். இதில் 0-4 என மான்சி தோல்வியடைந்தார். இதுவரை 'பிரீஸ்டைல்' பெண்கள் பிரிவில் வினேஷ் போகத் (50 கிலோ), அன்ஷு மாலிக் (57 கிலோ) மட்டும் பாரிஸ் ஒலிம்பிக் பங்கேற்க உள்ளனர்.