ADDED : மார் 11, 2024 10:52 PM

பாட்யாலா: பாரிஸ் ஒலிம்பிக் மல்யுத்த தகுதிச் சுற்றில் பங்கேற்கும் வாய்ப்பு பெற்றார் வினேஷ் போகத்.
பிரான்ஸ் தலைநகர் பாரிசில், 33வது ஒலிம்பிக் போட்டி (ஜூலை 26-ஆக. 11) நடக்கவுள்ளது. இதில் இடம் பெற்றுள்ள மல்யுத்த போட்டிக்கான ஆசிய பிரிவு தகுதிச்சுற்று, கிர்கிஸ்தானில் (ஏப். 19--21) நடக்கவுள்ளது. இதில் பங்கேற்கும் இந்திய வீராங்கனைகளுக்கான தகுதிப் போட்டி பஞ்சாப்பில் நேற்று நடந்தது.
இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவராக பிரிஜ் பூஷண் சிங்கிற்கு எதிராக போராட்டம் நடத்திய வினேஷ் போகத், வழக்கமாக 53 கிலோ எடைப்பிரிவில் பங்கேற்பார். ஆனால் இப்பிரிடில் அன்டிம் ஏற்கனவே ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.
இதையடுத்து 'தகுதி போட்டி நடக்கும் தினத்தில் ஒருவர், ஒரு பிரிவில் மட்டும் களமிறங்க வேண்டும்' என்ற சர்வதேச மல்யுத்த அமைப்பு விதிக்கு மாறாக, 50, 53 என இரு பிரிவில் களமிறங்கினார் வினேஷ் போகத்.
50 கிலோ பிரிவில் அசத்திய வினேஷ் போகத், பைனலில் 11-6 என ஷிவானியை வீழ்த்தினார். இதையடுத்து ஒலிம்பிக், மல்யுத்த போட்டிக்கான ஆசிய பிரிவு தகுதிச்சுற்றில் பங்கேற்கும் வாய்ப்பு பெற்றார். 53 கிலோ பிரிவில் வினேஷ் போகத், அரையிறுதியில் 0-10 என அஞ்சுவிடம் தோல்வியடைந்தார்.
நேற்று நடந்த மற்ற போட்டிகளில் அசத்திய அன்சு மாலிக் (57 கிலோ), மான்சி (62 கிலோ), நிஷா (68 கிலோ), ரீத்திகா (76 கிலோ) ஆசிய பிரிவு தகுதிச்சுற்றில் பங்கேற்க முன்னேறினர்.
