/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
மீண்டும் இந்திய மல்யுத்த கூட்டமைப்பு * தடையை நீக்கியது மத்திய அரசு
/
மீண்டும் இந்திய மல்யுத்த கூட்டமைப்பு * தடையை நீக்கியது மத்திய அரசு
மீண்டும் இந்திய மல்யுத்த கூட்டமைப்பு * தடையை நீக்கியது மத்திய அரசு
மீண்டும் இந்திய மல்யுத்த கூட்டமைப்பு * தடையை நீக்கியது மத்திய அரசு
ADDED : மார் 11, 2025 11:36 PM

புதுடில்லி: இந்திய மல்யுத்த கூட்டமைப்பு மீதான தடையை, மத்திய விளையாட்டு அமைச்சகம் நீக்கியது.
இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் (டபிள்யு.எப்.ஐ.,) தலைவராக பிரிஜ் பூஷன் சரண் சிங் இருந்தார். இவர் மீது பாலியல் புகார் கூறப்பட, கூட்டமைப்பில் இருந்து ஒதுங்கினார். இவருக்கு நெருக்கமான சஞ்சய் சிங், புதிய தலைவராக தேர்வு செய்யப்பட, சர்ச்சை தொடர்ந்தது. பிரிஜ் பூஷன் வீட்டில் இருந்து, டபிள்யு.எப்.ஐ., செயல்படுவதாக புகார் எழுந்தன.
இதனால் மத்திய விளையாட்டுத் துறை அமைச்சகம் டபிள்யு.எப்.ஐ.,க்கு தடை விதித்தது. மல்யுத்த கூட்டமைப்பை நிர்வகிக்க உயர் மட்ட கமிட்டியை, இந்திய ஒலிம்பிக் சங்கம் அமைத்தது. ஆனால், இந்த கமிட்டியை ஏற்க சர்வதேச மல்யுத்த கூட்டமைப்பு மறுத்தது.
இந்த குழப்பம் காரணமாக இந்திய மல்யுத்த நட்சத்திரங்கள், சர்வதேச தொடர்களில் பங்கேற்பதில் சிக்கல் நீடித்தது. இதையடுத்து டபிள்யு.எப்.ஐ., தலைமையகம், டில்லிக்கு மாற்றப்பட்டது. இதில் திருப்தி அடைந்த மத்திய விளையாட்டு அமைச்சகம், டபிள்யு.எப்.ஐ., மீதான தடையை நேற்று நீக்கியது. தவிர, 2026 ஆசிய விளையாட்டு, 2028 ஒலிம்பிக் போட்டியில் இந்திய நட்சத்திரங்கள் பதக்க வாய்ப்பை பாதிக்காமல் இருக்க இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து டபிள்யு.எப்.ஐ., தலைவர் சஞ்சய் சிங் கூறுகையில்,'' தடை காரணமாக மல்யுத்த வீரர், வீராங்கனைகள் பல்வேறு போட்டிகளில் பங்கேற்க முடியாமல் அவதிப்பட்டனர். மல்யுத்த விளையாட்டின் நலனுக்காக, தடை நீக்கப்பட வேண்டிய தேவை இருந்தது. தற்போது அரசின் முடிவு காரணமாக டபிள்யு.எப்.ஐ., அமைப்பு சீராக செயல்படும்,'' என்றார்.
எச்சரிக்கை
மத்திய விளையாட்டு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில்,' தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகள் இடையே, அதிகார சமநிலை இருப்பது உறுதி செய்யப்பட வேண்டும். நீக்கப்பட்டவர்களுடன் எவ்வித தொடர்பும் வைக்கக் கூடாது. இதுகுறித்த உறுதிமொழியை 4 வாரத்துக்குள் டபிள்யு.எப்.ஐ., வழங்க வேண்டும். இதை மீறினால் விளையாட்டு விதிகளின் படி சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்,' என தெரிவித்துள்ளது.
2 ஆண்டு போராட்டம்
2023, ஜன. 18: டபிள்யு.எப்.ஐ., பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது பாலியல் புகார். பதவி விலகக் கோரி போராட்டம் துவக்கம்.
ஜன. 20: புகாரை விசாரிக்க 7 பேர் கொண்ட குழு அமைப்பு.
ஏப். 23: டில்லியில் மீண்டும் போராட்டம் துவக்கம்.
மே 3: மல்யுத்த வீரர், வீராங்கனைகள், டில்லி போலீசார் இடையே மோதல்.
மே 11: பாலியல் புகாரில் பிரிஜ் பூஷன், வாக்குமூலம் பதிவு.
மே 28: பார்லிமெண்ட் நோக்கி சென்ற பேரணியில் மல்யுத்த நட்சத்திரங்கள் வினேஷ் போகத், பஜ்ரங் புனியா, சாக் சி மாலிக் உள்ளிட்டோர் கலவரத்தில் ஈடுபட்டதாக வழக்கு.
ஜூன் 7: மத்திய அமைச்சகத்தின் தலையீடு காரணமாக, போராட்டம் நிறுத்தம்.
ஆக. 23: டபிள்யு.எப்.ஐ., அமைப்பை, சர்வதேச மல்யுத்த அமைப்பு தடை செய்தது.
டிச. 21: பிரிஜ் பூஷன் ஆதரவாளர் சஞ்சய் சிங், புதிய தலைவரானார்.
டிச. 24: மத்திய அமைச்சகம் டபிள்யு.எப்.ஐ., அமைப்பை தடை செய்தது.
2024, மார்ச் 18: டபிள்யு.எப்.ஐ.,யை நிர்வகிக்க தற்காலிக குழு அமைப்பு.
2025, மார்ச் 11: டபிள்யு.எப்.ஐ., மீதான தடை நீக்கம்.