மீண்டும் களமிறங்கும் வினேஷ் * சீனியர் மல்யுத்த தொடரில்...
மீண்டும் களமிறங்கும் வினேஷ் * சீனியர் மல்யுத்த தொடரில்...
ADDED : ஏப் 28, 2026 10:48 PM

கோண்டா: வினேஷ் போகத் மீண்டும் மல்யுத்த போட்டியில் பங்கேற்கிறார்.
இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் 31. கடந்த 2024, பாரிஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்றார். இதில் சிறப்பாக செயல்பட்ட வினேஷ், ஒலிம்பிக் மல்யுத்தம், பைனலுக்கு முன்னேறிய முதல் இந்திய வீராங்கனை ஆனார். துரதிருஷ்டவசமாக பைனலுக்கு முன், உடல் எடை 50 கிராம் அதிகம் இருந்ததால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
பின் மல்யுத்தில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த வினேஷ், ஹரியானாவில் காங்., கட்சியில் இணைந்து எம்.எல்.ஏ., ஆனார். தற்போது ஓய்வு முடிவை திரும்பப் பெற்ற இவர், 2028 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்கும் வகையில், மீண்டும் மல்யுத்த போட்டியில் பங்கேற்கிறார்.
உ.பி.,யின் கோண்டா நகரில் மே 10-12ல் நடக்கவுள்ள சீனியர் ரேங்கிங் தொடரில், 57 கிலோ எடைப் பிரிவில் களமிறங்குகிறார். இதற்கான முன் பதிவை செய்யவிடாமல், இந்திய மல்யுத்த கூட்டமைப்பு (டபிள்யு.எப்.ஐ.,) தடுப்பதாக வினேஷ் புகார் தெரிவித்து இருந்தார்.
இதுகுறித்து டபிள்யு.எப்.ஐ., தலைவர் சஞ்சய் சிங் கூறுகையில்,''சீனியர் ரேங்கிங் தொடரில் பங்கேற்பவர்கள் இணையதளம் வழியாக பதிவு செய்ய வேண்டும் ஏற்கனவே தெரிவித்துள்ளோம். இதில், வினேஷ் போகத்தை நாங்கள் எப்படி தடுக்க முடியும். இணையதளத்தில் சில பிரச்னை இருந்தன. இவை சரி செய்யப்பட்டுவிட்டன,'' என்றார்.
