வினேஷ் போகத் பங்கேற்க தடை * இந்திய மல்யுத்த கூட்டமைப்பு முடிவு
வினேஷ் போகத் பங்கேற்க தடை * இந்திய மல்யுத்த கூட்டமைப்பு முடிவு
ADDED : மே 09, 2026 10:30 PM

புதுடில்லி: விதிகளை மீறிய வினேஷ் போகத், வரும் ஜூன் 26 வரை உள்ளூர் போட்டிகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்திய மல்யுத்த கூட்டமைப்பு (டபிள்யு.எப்.ஐ.,) தலைவராக இருந்த பிரிஜ்பூஷண் சிங் மீது, மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் உட்பட 6 வீராங்கனைகள் பாலியல் புகார் கொடுத்தனர்.
பின் புதிய தலைவராக பிரிஜ்பூஷண் ஆதரவாளர் சஞ்சய் சிங் தேர்வானார். இதனிடையே பாரிஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்ற வினேஷ் போகத், பைனலுக்கு முன்னேறினார். அப்போது நடந்த சோதனையில் 50 கிராம், எடை கூடுதலாக இருந்ததால், தகுதிநீக்கம் செய்யப்பட்டார்.
இந்த விரக்தியில் ஓய்வு பெற்ற வினேஷ் போகத், ஹரியானாவில் காங்., எம்.எல்.ஏ., ஆனார். கடந்த டிசம்பர் மாதம் ஓய்வு முடிவை திரும்ப பெற்றார். லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் (2028) பங்கேற்கும் வகையில், உ.பி.,யின் கோண்டா நகரில் இன்று துவங்கும், சீனியர் ரேங்கிங் தொடரில், 57 கிலோ பிரிவில் களமிறங்க இருந்தார்.
ஆனால் இதை, டபிள்யு.எப்.ஐ., தடுக்க முயற்சிப்பதாக, வினேஷ் போகத் குற்றம் சுமத்தி இருந்தார். இதனிடையே, 'மீண்டும் களமிறங்கும் தனது முடிவை, சர்வதேச கூட்டமைப்பு, தேசிய ஊக்கமருந்து தடுப்பு மையத்திடம், 6 மாதத்துக்கு முன் தெரிவித்து, ஊக்கமருந்து சோதனைக்கு தயாராக இருக்க வேண்டும்,' என்ற விதியை வினேஷ் போகத் பின்பற்றவில்லை என, டபிள்யு.எப்.ஐ., தெரிவித்துள்ளது.
இதுகுறித்து விளக்கம் தருமாறு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தவிர, வரும் ஜூன் 26 வரை உள்ளூர் போட்டிகளில் பங்கேற்க தடை விதித்தது. இதனால் வினேஷ் போகத், இன்று துவங்கும் 'ரேங்கிங்' தொடரில் பங்கேற்க முடியாது.
விளக்கம் வேண்டும்
கடந்த 2024 மார்ச் மாதம் நடந்த தகுதி போட்டியில், இரு பிரிவில் பங்கேற்றது, பாரிஸ் ஒலிம்பிக்கில் தகுதி நீக்கம் செய்யப்பட்டது, கடந்த 2025, டிச. 18ல் நடக்க இருந்த ஊக்கமருந்து சோதனையில் பங்கேற்காமல் தவிர்த்தது என பல்வேறு சம்பவங்கள் குறித்து வினேஷ் போகத், விளக்கம் தர வேண்டும் என டபிள்யு.எப்.ஐ., கேட்டுள்ளது.
