தொடரும் வினேஷ் போகத் 'யுத்தம்' * சதி நடப்பதாக புகார்
தொடரும் வினேஷ் போகத் 'யுத்தம்' * சதி நடப்பதாக புகார்
ADDED : மே 11, 2026 11:22 PM

கோண்டா: ''மல்யுத்த போட்டியில் இருந்து நான் விலகி விட வேண்டும் என விரும்புகின்றனர். திட்டமிட்டு சதி செய்கின்றனர்,'' என வினேஷ் போகத் தெரிவித்துள்ளார்.
இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் 31. பாரிஸ் ஒலிம்பிக்கில் (2024) பைனலுக்கு முன்னேறிய இவர், கூடுதல் எடை காரணமாக, தகுதிநீக்கம் செய்யப்பட்டார். பின் ஓய்வு பெற்ற இவர், கடந்த 2025, டிசம்பர் மாதம், மீண்டும் போட்டிகளில் பங்கேற்க போவதாக அறிவித்தார்.
வரும் ஆசிய விளையாட்டில் (செப். 19-அக். 4) பங்கேற்கும் வகையில், உ.பி.,யின் கோண்டா நகரில் நடக்கும் சீனியர் ரேங்கிங் தொடரில், 57 கிலோ பிரிவில் களமிறங்க இருந்தார்.
எனினும், கடந்த 2024ல் இந்திய மல்யுத்த கூட்டமைப்பு (டபிள்யு.எப்.ஐ.,) தலைவராக இருந்த பிரிஜ்பூஷண் சிங் மீது, வினேஷ் போகத் உட்பட 6 வீராங்கனைகள் பாலியல் புகார் கொடுத்ததால், தன்னை 'போட்டியில் பங்கேற்க விடாமல் தடுக்க முயற்சிப்பதாக,' வினேஷ் போகத் தெரிவித்தார்.
ஆனால், 'மீண்டும் களமிறங்கும் விஷயத்தில், விதிகளை மீறினார்,' என தெரிவித்த டபிள்யு.எப்.ஐ., வினேஷ் போகத்திடம் விளக்கம் கேட்டது. வரும் ஜூன் 26 வரை உள்ளூர் போட்டிகளில் பங்கேற்க தடை விதித்தது.
தகுதி உள்ளது
டபிள்யு.எப்.ஐ., கேள்விகளுக்கு வினேஷ் போகத் பதில் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியது: சர்வதேச போட்டியில் இருந்து எடுத்துக் கொண்ட இடைக்கால ஓய்வு, பயிற்சி, போட்டிகளுக்கு திரும்பிய கால வரையறைகளை டபிள்யு.எப்.ஐ., தவறாக புரிந்து கொண்டுள்ளது. தவிர, 2026, ஜன. 1 முதல் போட்டியில் பங்கேற்க தகுதி பெற்று விட்டேன் என, சர்வதேச சோதனை மையம், தெரிவித்துள்ளது. இன்று போட்டியில் பங்கேற்க எனக்குத் தகுதி உள்ளது.
ஒருவேளை விதிகளை மீறி இருந்தால், சர்வதேச மல்யுத்தம் எனக்கு தடை விதித்து இருக்கும். எனக்கு போட்டியிட வாய்ப்பு தாருங்கள் என்று தான் கேட்கிறேன். ஆனால், தோல்வியை ஏற்றுக் கொண்டு நான் விலக வேண்டும் என விரும்புகின்றனரா அல்லது சன்னியாசம் செல்ல வேண்டுமா என தெரியவில்லை.
நான் போட்டிக்கு தயாராகி வந்த நேரத்தில், கடந்த வெள்ளிக்கிழமை இரவு நோட்டீஸ் அனுப்பினர். நீதிமன்ற விடுமுறை, மனு தாக்கல் செய்ய முடியாத நேரம் என அனைத்து விஷயங்களையும் திட்டமிட்டு, எனக்கு எதிராக சதி செய்கின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
உயிரை பணயம் வைத்து...
நேற்று வினேஷ் போகத், போட்டி நடக்கும் உ.பி.,யின் அயோத்திக்கு அருகில் உள்ள நந்தினி நகருக்கு (கோண்டா) வந்தார். இங்குள்ள ஓட்டலில் தங்கியுள்ளார். இன்று பெண்களுக்கான போட்டிகள் நடக்கின்றன. வினேஷ் போகத் கூறுகையில்,'' போட்டியில் பங்கேற்க அனைத்து வழியிலும் முயற்சிக்கிறேன். ஆனால், அவர்கள் தடுக்கின்றனர். எனது உயிரை பணயம் வைத்து இங்கு வந்துள்ளேன்,'' என்றார்.
அனுமதி இல்லை
டபிள்யு.எப்.ஐ., தரப்பில் கூறுகையில்,'' வினேஷ் போகத்திடம் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன. இவற்றுக்கு சரியான பதில்கள், ஆதாரங்கள் இணைக்கப்படவில்லை. அவரது கடிதத்தை சர்வதேச மல்யுத்த கூட்டமைப்பு, சர்வதேச சோதனை மையத்துக்கு அனுப்பியுள்ளோம். போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்பட மாட்டார்,' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடவுளுக்கு தெரியும்
வினேஷ் போகத் கூறுகையில்,'' நேர்மையாக, உண்மையாக, கடினமாக முயற்சிக்கிறேன். நான் எவ்வித குற்றமும் செய்யவில்லை என கடவுளுக்குத் தெரியும். நான் செய்வது சரி என்றார், அவர் சக்தி தருவார். நமது உரிமைகளுக்காகவே போராடுகிறோம்,'' என்றார்.
