ADDED : மே 12, 2026 10:57 PM

புதுடில்லி: ''மல்யுத்த போட்டியில் வினேஷ் போகத் பங்கேற்க, பிரதமர் மோடி, விளையாட்டுத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, உதவ வேண்டும்,'' என சாக் ஷி மாலிக் தெரிவித்துள்ளார்.
இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் 31. பாரிஸ் ஒலிம்பிக் (2024) பைனலுக்கு முன்னேறிய இவர், கூடுதல் எடை காரணமாக, தகுதிநீக்கம் செய்யப்பட்டார். பின் ஓய்வு பெற்றார்.
முடிவை திரும்பப் பெற்ற இவர், வரும் ஆசிய விளையாட்டில் (செப். 19-அக். 4) பங்கேற்கும் வகையில், உ.பி.,யின் கோண்டா நகரில் நடக்கும் சீனியர் ரேங்கிங் தொடரில், 57 கிலோ பிரிவில் களமிறங்க இருந்தார்.
எனினும், கடந்த 2024ல் இந்திய மல்யுத்த கூட்டமைப்பு (டபிள்யு.எப்.ஐ.,) தலைவராக இருந்த பிரிஜ்பூஷண் சிங் மீது, வினேஷ் போகத் உட்பட 6 வீராங்கனைகள் பாலியல் புகார் கொடுத்ததால், 'போட்டியில் பங்கேற்க விடாமல் தடுப்பதாக,' வினேஷ் போகத் தெரிவித்தார். தவிர, 'வினேஷ் போகத் விதிகளை மீறியதால், வரும் ஜூன் 26 வரை உள்ளூர் போட்டிகளில் பங்கேற்க, டபிள்யு.எப்.ஐ., தடை விதித்தது.
ஆனால், 'சர்வதேச ஊக்கமருந்து சோதனை மையம், தனக்கு தடை விதிக்கவில்லை,' என்ற வினேஷ் போகத், போட்டி நடக்கும் உ.பி.,யின் கோண்டா நகருக்கு வந்தார். எனினும், டபிள்யு.எப்.ஐ., அனுமதி அளிக்கவில்லை.
சாக் ஷி ஆதரவு
இதுகுறித்து சக வீராங்கனை சாக் ஷி மாலிக் கூறியது:
விளையாட்டு வீராங்கனைகள் தாய்மை அடைந்த பிறகும், தொடர்ந்து தேசத்திற்காக விளையாடி பல்வேறு பதக்கங்கள் பெற்றுத் தந்துள்ளனர். இதற்காக பல நாடுகள், விதிகளில் தளர்வு செய்து, வீராங்கனைகளுக்கு ஆதரவாக நின்றுள்ளன.
ஆனால், வினேஷ் போகத் மீண்டும் போட்டிக்கு திரும்புவதை தடுக்கும் வகையில், டபிள்யு.எப்.ஐ., அமைப்பு பல்வேறு விதிகளை விதித்துள்ளன. இவ்விஷயத்தில் பிரதமர் மோடி, விளையாட்டுத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தலையிட வேண்டும். வினேஷ் போகத்திற்காக, தகுதி போட்டியை நடத்த முன் வரவேண்டும். இதனால் தேசத்திற்கு மீண்டும் பதக்கம் வென்று தருவார்.
தவிர தாய்மை அடைந்த பின்பும், பதக்கங்கள் வென்று மற்ற வீராங்கனைகளுக்கு முன் உதாரணமாக இருப்பார்.
இவ்வாறு சாக் ஷி மாலிக் கூறினார்.
