ADDED : ஆக 29, 2026 09:39 PM

நியூயார்க்: யு.எஸ்., ஓபன் டென்னிஸ் ஒற்றையரில் பெலாரஸ் வீராங்கனை சபலென்கா மீண்டும் கோப்பை வென்று சாதிக்க காத்திருக்கிறார்.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில், யு.எஸ்., ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் இன்று துவங்குகிறது. பெண்கள் ஒற்றையரில் 'நடப்பு சாம்பியன்' பெலாரசின் அரினா சபலென்கா மீது அதிக எதிர்பார்ப்பு உள்ளது. உலகின் 'நம்பர்-1' வீராங்கனையான இவர், இந்த ஆண்டு இந்தியன் வெல்ஸ், மயாமி ஓபனில் கோப்பை வென்றுள்ளார்.
இம்முறை அசத்தினால் அமெரிக்காவின் செரினாவுக்கு (2012-14) பின், யு.எஸ்., ஓபன் ஒற்றையரில் 'ஹாட்ரிக்' பட்டம் கைப்பற்றிய வீராங்கனையாகலாம்.
கஜகஸ்தானின் எலினா ரிபாகினா, அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா, கோகோ காப், போலந்தின் இகா ஸ்வியாடெக், செக்குடியரசின் கரோலினா முசோவா, உக்ரைனின் எலினா ஸ்விடோலினா உள்ளிட்டோரும் கோப்பை வெல்ல முயற்சிக்கலாம்.
அசத்துவாரா அல்காரஸ்: ஆண்கள் ஒற்றையரில் ஸ்பெயினின் கார்லஸ் அல்காரஸ் சாதிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வலது கை மணிக்கட்டு பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக பிரெஞ்ச் ஓபன், விம்பிள்டனில் பங்கேற்காத அல்காரஸ், இந்த ஆண்டு ஆஸ்திரேலிய ஓபனில் முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றிருந்தார். இம்முறை அசத்தினால் யு.எஸ்., ஓபனில் தனது 3வது பட்டத்தை பெறலாம்.
அல்காரசிற்கு, ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் சவால் கொடுக்கலாம். இந்த ஆண்டு பிரெஞ்ச் ஓபனில் தனது முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை கைப்பற்றிய ஸ்வெரேவ், விம்பிள்டனில் பைனல் வரை சென்றிருந்தார். இவரது 'பார்ம்' தொடரும் பட்சத்தில் யு.எஸ்., ஓபனில் முதல் முறையாக சாம்பியன் ஆகலாம்.
செர்பியாவின் ஜோகோவிச் சிறப்பாக செயல்படும் பட்சத்தில் ஒட்டுமொத்த கிராண்ட்ஸ்லாம் அரங்கில் தனது 25வது பட்டத்தை தட்டிச் செல்லலாம். ஏற்கனவே இவர், யு.எஸ்., ஓபனில் 4 முறை கோப்பை வென்றுள்ளார்.
பரிசு எவ்வளவு
யு.எஸ்., ஓபன் ஒற்றையரில் கோப்பை வெல்லும் வீரர்/வீராங்கனைக்கு ரூ. 52 கோடி பரிசுத்தொகை வழங்கப்படும். இரண்டாவது இடம் பிடிப்பவருக்கு ரூ. 27 கோடி பரிசாக கிடைக்கும்.
