ADDED : ஜன 16, 2025 11:15 PM

மெல்போர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் மூன்றாவது சுற்றுக்குள் நுழைந்தார் ஸ்வியாடெக்.
ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர், மெல்போர்னில் நடக்கிறது. பெண்கள் ஒற்றையர் முதல் சுற்றில், 'நம்பர்-2' வீராங்கனை போலந்தின் இகா ஸ்வியாடெக், செக் குடியரசின் ஸ்ரம்கோவா மோதினர். இதில் ஸ்வியாடெக் 6-0, 6-2 என எளிதாக வெற்றி பெற்று, மூன்றாவது சுற்றுக்குள் நுழைந்தார்.
மற்றொரு இரண்டாவது சுற்றில் உலகின் 'நம்பர்-7' வீராங்கனை கஜகஸ்தானின் ரிபாகினா, 6-0, 6-3 என்ற கணக்கில் அமெரிக்காவின் இவா ஜோவிச்சை வீழ்த்தினார். பிரிட்டனின் ரடுகானு, 6-3, 7-5 என அமெரிக்காவின் அனிசிமோவாவை வென்றார். மற்ற இரண்டாவது சுற்று போட்டிகளில் கசட்கினா (ரஷ்யா), நவாரோ, மடிசன் கீஸ், கோலின்ஸ் (அமெரிக்கா), புடின்செவா (கஜகஸ்தான்) உள்ளிட்டோர் வெற்றி பெற்றனர்.
சின்னர் அபாரம்
ஆண்கள் ஒற்றையர் இரண்டாவது சுற்றில் உலகின் 'நம்பர்-1' வீரர் இத்தாலியின் சின்னர், ஆஸ்திரேலியாவின் திரிஸ்டனை எதிர்கொண்டார். 2 மணி நேரம், 50 நிமிட போராட்டத்திற்குப் பின் சின்னர், 4-6, 6-4, 6-1, 6-3 என்ற கணக்கில் வெற்றி பெற்றார். மற்ற போட்டிகளில் கச்சானோவ் (ரஷ்யா), மான்பில்ஸ் (பிரான்ஸ்), மசெட்டி (இத்தாலி) உள்ளிட்டோர் வெற்றி பெற்றனர்.
பாலாஜி ஜோடி அபாரம்
ஆண்கள் இரட்டையர் முதல் சுற்றில் இந்தியாவின் ஸ்ரீராம் பாலாஜி (தமிழகம்), மெக்சிகோவின் மிகுயல் வரேலா ஜோடி, 6-4, 6-3 என நெதர்லாந்தின் ராபின் ஹசே, கஜகஸ்தானின் அலெக்சாண்டர் ஜோடியை வீழ்த்தியது.
*மற்ற முதல் சுற்று போட்டிகளில் இந்தியாவின் ஜீவன் நெடுஞ்செழியன், விஜய் சுந்தர் பிரசாந்த் ஜோடி, இந்தியாவின் அனிருத் சந்திரசேகர், போலந்தின் கரோல், இந்தியாவின் ரித்விக், அமெரிக்காவின் ரியான் ஜோடி தோல்வியடைந்தன.
'அனிமேஷன்' அவதாரம்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டிகளை 'வீடியோ கேம்' போல 'அனிமேஷன்' செய்து 'யூ டியூப்' சானலில் நேரடியாக ஒளிபரப்புகின்றனர்.
வீரர், வீராங்கனைகள் அணிந்துள்ள ஆடைகளுடன், சித்தரிக்கப்பட்ட 'அனிமேஷன்' உருவம் விளையாடுவது, இணையதள பார்வையாளர்களுக்கு புதிய அனுபவத்தை கொடுக்கிறது. முக்கியமான மூன்று மைதானத்தில் நடக்கும் போட்டிகள் ஒரு 'கேம்' தாமதத்துடன் ஒளிபரப்பாகிறது.
கனடா வீராங்கனை லேலா கூறுகையில்,'' சில நேரங்களில் பார்ப்பதற்கு உண்மையான வீரர்கள் விளையாடுவதைப் போன்று உள்ளது. இது விசித்திரமாகவும், வேடிக்கையாகவும் உள்ளது. பல்வேறு வீரர், வீராங்கனைகள் விளையாடுவதை பார்த்தேன். அடுத்து என்னை, நானே பார்க்க ஆர்வமாக உள்ளேன்,'' என்றார்.