ADDED : ஆக 03, 2024 11:39 PM

டொரான்டோ: கனடா ஓபன் டென்னிஸ் தொடரில் இருந்து போலந்தின் ஸ்வியாடெக் விலகினார்.
யு.எஸ்., ஓபன் கிராண்ட்ஸ்லாம் தொடருக்கு தயாராகும் விதமாக டொரான்டோவில், கனடா ஓபன் டென்னிஸ் ஆக. 6-12ல் நடக்கிறது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இருந்து உலகின் 'நம்பர்-1' போலந்தின் இகா ஸ்வியாடெக் விலகினார். பாரிஸ் ஒலிம்பிக் ஒற்றையரில் வெண்கலம் வென்ற இவர், இதுவரை 5 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றுள்ளார். தொடர்ச்சியாக போட்டிகளில் பங்கேற்று வருவதால் ஏற்பட்ட உடல் சோர்வு காரணமாக விலகினார்.
கஜகஸ்தானின் எலினா ரிபாகினா, இத்தாலியின் ஜாஸ்மின் பவுலினி, அமெரிக்காவின் டேனியல் கோலின்ஸ், கிரீசின் மரியா சக்காரி, செக்குடியரசின் பார்போரா கிரெஜ்சிகோவா ஆகியோரும் இத்தொடரில் இருந்து விலகினர். இதனையடுத்து அமெரிக்காவின் சோபியா கெனின், ஸ்லோன் ஸ்டீபன்ஸ், நேரடியாக பிரதான சுற்றுக்கு தகுதி பெற்றனர்.
ஸ்வியாடெக் கூறுகையில், ''உடல் சோர்வு காரணமாக சிறிது ஓய்வு தேவைப்படுவதால் கனடா ஓபனில் இருந்து விலக நேரிட்டது. விரைவில் போட்டிக்கு திரும்புவேன்,'' என்றார்.