ADDED : ஆக 10, 2026 11:14 PM

புதுடில்லி: தென் கொரியாவின் சியோல் நகரில், வரும் செப். 18-19ல் டேவிஸ் கோப்பை டென்னிஸ், பைனலுக்கான தகுதிச்சுற்றின் 'ரவுண்டு-2' போட்டி நடக்கவுள்ளது. இதில் இந்தியா, தென் கொரியா அணிகள் மோதுகின்றன. இப்போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது.
ஒற்றையர் பிரிவில் விளையாட, ஏ.டி.பி., தரவரிசையில் 362வது இடத்தில் உள்ள மனாஸ் தம்னே, முதல் முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். மற்ற இந்திய வீரர்களான சுமித் நாகல் (235வது இடம்), தக் ஷினேஸ்வர் சுரேஷ் (393வது), ஒற்றையரில் தங்களது இடத்தை தக்கவைத்துக் கொண்டனர். இரட்டையர் பிரிவில் யூகி பாம்ப்ரி ('நம்பர்-28'), ஸ்ரீராம் பாலாஜி (57வது) ஜோடி மீண்டும் களமிறங்குகிறது.
மாற்று வீரர்களாக அர்னவ் பாபர்கர், சித்தார்த் ரவாத் இடம் பெற்றுள்ளனர்.
டேவிஸ் கோப்பை அரங்கில் இவ்விரு அணிகள் மோதிய 11 போட்டியில், தென் கொரியா 6, இந்தியா 5ல் வெற்றி கண்டன. இம்முறை வெற்றி பெறும் அணி, வரும் நவம்பரில் நடக்கவுள்ள 8 அணிகள் பங்கேற்கும் பைனல் சுற்றுக்கு முன்னேறும்.
