ADDED : ஜூன் 04, 2026 09:57 PM

பாரிஸ்: பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் ஒற்றையர் பிரிவு பைனலுக்கு முதன் முறையாக ரஷ்யாவின் ஆன்ட்ரீவா முன்னேறினார்.
பிரான்ஸ் தலைநகர் பாரிசில், பிரெஞ்ச் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடக்கிறது. பெண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில், உலகின் 'நம்பர்-8' ரஷ்யாவின் மிர்ரா ஆன்ட்ரீவா, 15வது இடத்தில் உள்ள உக்ரைனின் மார்டா கோஸ்டியுக் மோதினர்.
முதல் செட்டை 6-1 எனக் கைப்பற்றிய ஆன்ட்ரீவா, இரண்டாவது செட்டை 6-3 என தட்டிச்சென்றார். ஒரு மணி நேரம், 16 நிமிடம் நீடித்த போட்டியில் அசத்திய ஆன்ட்ரீவா 6-1, 6-3 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று, கிராண்ட்ஸ்லாம் தொடரின் பைனலுக்கு முதல் முறையாக முன்னேறினார். இதற்கு முன், 2024ல் நடந்த பிரெஞ்ச் ஓபனில் அரையிறுதி வரை சென்றிருந்தார்.
ரஷ்யா, உக்ரைன் போர் காரணமாக போட்டிக்கு முன், இருவரும் இணைந்து போட்டோ எடுக்கவில்லை. தவிர, போட்டி முடிந்த பின் இருவரும் கை குலுக்கவில்லை.
இத்தாலி ஜோடி சாம்பியன்
கலப்பு இரட்டையர் பிரிவு பைனலில் இத்தாலியின் சாரா இரானி, ஆன்ட்ரியா வாவஸ்சோரி ஜோடி, கனடாவின் கேப்ரியலா டப்ரோவ்ஸ்கி, அமெரிக்காவின் எவான் கிங் ஜோடியை சந்தித்தது. இதில் இத்தாலி ஜோடி 4-6, 6-3, 10-4 என்ற கணக்கில் வெற்றி பெற்று, பிரெஞ்ச் ஓபனில் தொடர்ந்து 2வது முறையாக (2025, 2026) சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இது, இந்த ஜோடி கைப்பற்றிய 4வது கிராண்ட்ஸ்லாம் பட்டம். ஏற்கனவே யு.எஸ்., ஓபனில் இரண்டு முறை (2024, 2025) கோப்பை வென்றிருந்தது.
