/
செய்திகள்
/
விளையாட்டு
/
டென்னிஸ்
/
எத்தனை அருமை 43 வயதினிலே எத்தனை பெருமை போபண்ணா ஆட்டத்திலே... கோப்பை வென்று சாதனை
/
எத்தனை அருமை 43 வயதினிலே எத்தனை பெருமை போபண்ணா ஆட்டத்திலே... கோப்பை வென்று சாதனை
எத்தனை அருமை 43 வயதினிலே எத்தனை பெருமை போபண்ணா ஆட்டத்திலே... கோப்பை வென்று சாதனை
எத்தனை அருமை 43 வயதினிலே எத்தனை பெருமை போபண்ணா ஆட்டத்திலே... கோப்பை வென்று சாதனை
ADDED : ஜன 29, 2024 03:55 PM

மெல்போர்ன், ஜன. 28-
'வயது என்பது 'நம்பர்' தான்; சாதிக்க வயது தடை இல்லை' என்பதை நிரூபித்துள்ளார் இந்தியாவின் போபண்ணா. 43 வயதில் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் இரட்டையர் பிரிவில் கோப்பை வென்று சாதித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் நடக்கிறது. இதன் ஆண்கள் இரட்டையர் பிரிவு பைனலில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, ஆஸ்திரேலியாவின் மாத்யூ எப்டென் ஜோடி, இத்தாலியின் சிமோன் பொல்லேல்லி, ஆன்ட்ரியா வாவசோரி ஜோடியை எதிர்கொண்டது.
'டை பிரேக்கர்' வரை நீடித்த முதல் செட்டை 7-6 எனக் கைப்பற்றிய இந்தியா-ஆஸ்திரேலிய ஜோடி, இரண்டாவது செட்டை 7-5 என தன்வசப்படுத்தியது. ஒரு மணி நேரம், 39 நிமிடம் நீடித்த போட்டியில் அசத்திய போபண்ணா, எப்டென் ஜோடி 7-6, 7-5 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
இந்த வெற்றியின் மூலம் கிராண்ட்ஸ்லாம் ஆண்கள் இரட்டையர் பிரிவில் போபண்ணா தனது முதல் பட்டத்தை கைப்பற்றினார். தவிர இது, இவரது 2வது கிராண்ட்ஸ்லாம் இரட்டையர் பட்டமானது. இதற்கு முன் 2017ல் கனடா வீராங்கனை கேப்ரியேலா டப்ரோவ்ஸ்கியுடன் இணைந்து பிரெஞ்ச் ஓபன் கலப்பு இரட்டையரில் கோப்பை வென்றிருந்தார்.
கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற 3வது இந்திய வீரர், 4வது இந்தியரானார் போபண்ணா. ஏற்கனவே இந்தியாவின் லியாண்டர் பயஸ் (ஆண்கள் இரட்டையர்-8, கலப்பு இரட்டையர்-10), மகேஷ் பூபதி (ஆண்கள் இரட்டையர்-4, கலப்பு இரட்டையர்-8), சானியா மிர்சா (பெண்கள் இரட்டையர்-3, கலப்பு இரட்டையர்-3) கோப்பை வென்றிருந்தனர்.
மூத்த வீரர்
அதிக வயதில் (43) கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற வீரரானார் போபண்ணா. இதற்கு முன் 2022ல் நடந்த பிரெஞ் ஓபன் ஆண்கள் இரட்டையரில் நெதர்லாந்தின் ஜீன்-ஜூலியன் ரோஜர், தனது 40வது வயதில் கோப்பை வென்றிருந்தார்.
'நம்பர்-1' இடம்
நாளை வெளியாகும் ஏ.டி.பி., ஆண்கள் இரட்டையர் பிரிவு தரவரிசையில் இந்தியாவின் போபண்ணா முதன்முறையாக 'நம்பர்-1' இடத்தை கைப்பற்றுகிறார். இதன்மூலம் இச்சாதனை படைத்த 3வது இந்திய வீரர் என்ற பெருமை பெற உள்ளார். ஏற்கனவே பயஸ், பூபதி முதலிடம் பிடித்திருந்தனர்.
தவிர இவர், அதிக வயதில் முதன்முறையாக 'நம்பர்-1' இடம் பிடிக்கும் வீரராகிறார். இதற்கு முன் 2022 அக்டோபரில் வெளியான தரவரிசையில் அமெரிக்காவின் ராஜிவ் ராம், தனது 38வது வயதில் முதன்முறையாக 'நம்பர்-1' இடம் பிடித்திருந்தார்.