ADDED : பிப் 22, 2024 08:29 PM

புனே: ஏ.டி.பி., சாலஞ்சர் டென்னிஸ் இரட்டையர் பிரிவு அரையிறுதிக்கு இந்தியாவின் ராமநாதன்-மைனேனி, அர்ஜுன்-ஜீவன் ஜோடி முன்னேறின.
மகாராஷ்டிராவின் புனேயில் ஏ.டி.பி., சாலஞ்சர் கோப்பை டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் இரட்டையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் சாகேத் மைனேனி, ராம்குமார் ராமநாதன் ஜோடி, குரோஷியாவின் டுஜே அஜ்டுகோவிச், இத்தாலியின் என்ரிகோ டல்லா வல்லே ஜோடியை சந்தித்தது. இதில் மைனேனி-ராமநாதன் ஜோடி 6-2, 6-7, 10-2 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
மற்றொரு காலிறுதியில் இந்தியாவின் அர்ஜுன் காதே, ஜீவன் நெடுஞ்செழியன் ஜோடி 6-4, 7-6 என ஜெர்மனியின் மார்க் வால்னர், ஜேக்கப் ஜோடியை வீழ்த்தியது.
ஒற்றையர் பிரிவு 'ரவுண்டு-16' போட்டியில் இந்தியாவின் சுமித் நாகல், நிக்கி கலியாண்ட பூனாச்சா மோதினர். இதில் சுமித் நாகல் 4-6, 3-6 என தோல்வியடைந்தார். மற்றொரு போட்டியில் இந்தியாவின் ராம்குமார் ராமநாதன் 4-6, 4-6 என ரஷ்யாவின் அலெக்சி ஜகரோவிடம் வீழ்ந்தார்.