ADDED : மார் 22, 2024 10:29 PM

சண்டிகர்: ஐ.டி.எப்., டென்னிஸ் ஒற்றையர் பிரிவு அரையிறுதிக்கு இந்தியாவின் ராம்குமார் ராமநாதன், சசிகுமார் முகுந்த் முன்னேறினர்.
சண்டிகரில் ஆண்களுக்கான ஐ.டி.எப்., டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் ராம்குமார் ராமநாதன், சிராக் துஹான் மோதினர்.
முதல் செட்டை 4-6 என இழந்த ராமநாதன், பின் எழுச்சி கண்டு இரண்டாவது செட்டை 6-2 எனக் கைப்பற்றி பதிலடி கொடுத்தார். வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது செட்டில் மீண்டும் அசத்திய இவர் 6-4 என வென்றார். முடிவில் ராம்குமார் ராமநாதன் 4-6, 6-2, 6-4 என்ற கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
மற்றொரு காலிறுதியில் இந்தியாவின் சசிகுமார் முகுந்த், சீனதைபேயின் பாங் ஷுவோ யின் மோதினர். அபாரமாக ஆடிய சசிகுமார் 6-2, 6-3 என வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைந்தார்.
இரட்டையர் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் சித்தாந்த் பந்தியா, கரண் சிங் ஜோடி 6-3, 6-3 என சகநாட்டை சேர்ந்த மணிஷ் சுரேஷ்குமார், விஷ்ணுவர்தன் ஜோடியை வீழ்த்தியது.

