ADDED : ஜூன் 11, 2026 09:50 PM

லண்டன்: 'குயீன்ஸ் கிளப்' சாம்பியன்ஷிப் காலிறுதியில் இருந்து அமெரிக்காவின் செரினா, கனடாவின் எம்போகோ ஜோடி விலகியது.
அமெரிக்க டென்னிஸ் வீராங்கனை செரினா வில்லியம்ஸ் 44. ஒற்றையர் பிரிவில் 23 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற இவர், 2022ல் ஓய்வை அறிவித்தார். நான்கு ஆண்டுகளுக்கு பின் ஓய்வு முடிவை திரும்ப பெற்ற செரினா, இரட்டையர் பிரிவில் மட்டும் பங்கேற்க முடிவு செய்தார்.
லண்டனில் நடக்கும் 'குயீன்ஸ் கிளப்' சாம்பியன்ஷிப் இரட்டையரில் கனடாவின் விக்டோரியா எம்போகோவுடன் களமிறங்கினார். முதல் சுற்றில் செரினா, எம்போகோ ஜோடி வெற்றி பெற்றது. ஒற்றையர் பிரிவு போட்டியின் போது முழங்காலில் காயமடைந்த எம்போகோ, இரட்டையர் பிரிவு காலிறுதியில் இருந்து விலகினார். இதனையடுத்து செரினாவின் கோப்பை கனவு தகர்ந்தது. அடுத்து ஜெர்மனியில் நடக்கவுள்ள பெர்லின் ஓபனில் செரினா பங்கேற்க உள்ளார்.
