காலிறுதிக்கு முன்னேறினார் ஆன்ட்ரீவா * பிரெஞ்ச் ஓபன் டென்னிசில்
காலிறுதிக்கு முன்னேறினார் ஆன்ட்ரீவா * பிரெஞ்ச் ஓபன் டென்னிசில்
ADDED : ஜூன் 01, 2026 11:11 PM

பாரிஸ்: பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் காலிறுதிக்கு ஆன்ட்ரீவா முன்னேறினார்.
பிரான்ஸ் தலைநகர் பாரிசில், பிரெஞ்ச் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடக்கிறது. பெண்கள் ஒற்றையர் பிரிவு நான்காவது சுற்றில் 'நம்பர்-8' வீராங்கனை ரஷ்யாவின் மிர்ரா ஆன்ட்ரீவா, 170வது இடத்திலுள்ள சுவிட்சர்லாந்தின் ஜில் டெய்ச்மான் மோதினர்.
ஒரு மணி நேரம், 26 நிமிடம் நடந்த போட்டியின் முடிவில் ஆன்ட்ரீவா, 6-3, 6-2 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று, இத்தொடரில் முதன் முறையாக காலிறுதிக்கு முன்னேறினார். இதில் 18 வது இடத்திலுள்ள ருமேனியாவின் சர்ஸ்டீயாவை சந்திக்க உள்ளார்.
கலின்ஸ்கயா அபாரம்
பெண்கள் ஒற்றையர் நான்காவது சுற்றில் ரஷ்யாவின் அனா கலின்ஸ்கயா, ஆஸ்திரியாவின் அனஸ்தசியா பொட போவாவை எதிர்கொண்டார்.
முதல் செட்டை கலின்ஸ்கயா 6-4 என வென்றார். அடுத்த செட்டை 2-6 என நழுவவிட்டார். மூன்றாவது செட் 6-6 என இழுபறியானது. வெற்றியாளரை முடிவு செய்ய நடந்த 'டை பிரேக்கரில்' அசத்திய கலின்ஸ்கயா 7-6 என வசப்படுத்தினார்.
2 மணி நேரம், 50 நிமிடம் நடந்த போட்டியின் முடிவில் கலின்ஸ்கயா 6-4, 2-6, 7-6 என்ற கணக்கில் வெற்றி பெற்று, காலிறுதிக்கு முன்னேறினார்.
நேற்று நடந்த மற்றொரு போட்டியில் அமெரிக்காவின் மடிசன் கீஸ், 3-6, 6-3, 0-6 என ரஷ்யாவின் ஸ்னைடரிடம் வீழ்ந்தார்.
ரூபலெவ் 'ஷாக்'
ஆண்கள் ஒற்றையர் நான்காவது சுற்றில் ரஷ்யாவின் ரூபலெவ் ('நம்பர்-13'), செக் குடியரசின் மென்சிக் ('நம்பர்-27') மோதினர். மூன்று மணி நேரம் 48 நிமிடம் நீடித்த இப்போட்டியில் ரூபலெவ், 3-6, 6-7, 6-4, 6-2, 3-6 என்ற செட் கணக்கில் போராடி தோல்வியடைந்தார்.
மற்றொரு நான்காவது சுற்று போட்டியில் பிரான்சின் ஜோயாவோ பொன்செகா, நார்வேயின் காஸ்பர் ரூடு மோதினர். மூன்று மணி நேரம் 58 நிமிடம் நடந்த இப்போட்டியில் பொன்செகா, 7-5, 7-6, 5-7, 6-2 என போராடி வெற்றி பெற்றார்.
மாயா ஏமாற்றம்
பிரெஞ்ச் ஓபன் ஜூனியர் பெண்கள், இரண்டாவது சுற்றில் இந்தியாவின் மாயா ரேவதி, ரஷ்யாவின் மகரோவா மோதினர். இதில் மாயா 7-6, 6-4 என போராடி தோல்வியடைந்தார்.
* ஜூனியர் ஆண்கள் இரண்டாவது சுற்றில் இந்தியாவின் அர்னாவ் பாபர்கர், 6-2, 6-4 என சீன தைபேவின் குவான் செனை வீழ்த்தினார்.
