/
செய்திகள்
/
விளையாட்டு
/
டென்னிஸ்
/
'கிங்' நடால் 'குட்-பை' * சர்வதேச டென்னிசில் இருந்து...
/
'கிங்' நடால் 'குட்-பை' * சர்வதேச டென்னிசில் இருந்து...
'கிங்' நடால் 'குட்-பை' * சர்வதேச டென்னிசில் இருந்து...
'கிங்' நடால் 'குட்-பை' * சர்வதேச டென்னிசில் இருந்து...
ADDED : நவ 20, 2024 11:05 PM

மலாகா: டேவிஸ் கோப்பை போட்டியுடன் டென்னிஸ் அரங்கில் இருந்து ஓய்வு பெற்றார் நடால்.
ஸ்பெயின் டென்னிஸ் வீரர் ரபெல் நடால் 38. கடந்த 2001ல் ஏ.டி.பி., டென்னிஸ் அரங்கில் காலடி வைத்தார். ஒற்றையர் பிரிவில் 22 கிராண்ட்ஸ்லாம், 36 மாஸ்டர்ஸ் உட்பட 92 பட்டம் வென்றுள்ளார். களிமண் கள நாயகனான இவர், பிரெஞ்ச் ஓபனில் மட்டும் அதிகபட்சம் 14 முறை சாம்பியன் ஆனார்.
பீஜிங் ஒலிம்பிக் (2008) ஒற்றையர், ரியோ ஒலிம்பிக் (2016) இரட்டையரில் தங்கத்தை தட்டிச் சென்றார் நடால். கடந்த 2008, ஆக. 18ல் ஒற்றையர் தரவரிசையில் முதன்முறையாக 'நம்பர்-1' இடம் பிடித்தார். தொடர்ந்து 209 வாரம் முதலிடத்தில் இருந்துள்ளார்.
பாரிஸ் ஒலிம்பிக்கில் ஒற்றையரில் 2வது சுற்று, இரட்டையரில் காலிறுதியுடன் திரும்பினார். கடைசியாக டேவிஸ் கோப்பை காலிறுதியில் ஸ்பெயின் அணிக்காக களமிறங்கினார். இதில் தரவரிசையில் 80 வது இடத்திலுள்ள நெதர்லாந்தின் போடிக்கிடம் 4-6, 4-6 என்ற நேர் செட்டில் தோல்வியடைந்தார்.
இப்போட்டியுடன் டென்னிஸ் அரங்கில் இருந்து விடைபெற்றார் நடால். அப்போது அவர் கூறியது:
தொடர்ந்து டென்னிஸ் விளையாடவே விரும்புகிறேன். ஆனால் உடல் ஒத்துழைக்க மறுக்கிறது. டென்னிஸ் இல்லாமல் இருப்பது கடினம் தான். வேறு வழியில்லாத நிலையில், இந்த சூழலை ஏற்றுக் கொண்டேன். மற்றபடி எதிர்பார்த்ததை விட அதிக ஆண்டு டென்னிஸ் விளையாடியது பெருமையாக உள்ளது.
இதில் நான் வென்ற பட்டங்கள், பரிசுகள் அனைத்தும் எல்லோருக்கும் தெரியும். ஆனால் மல்லோர்காவில் உள்ள சிறிய கிராமத்தை சேர்ந்த ஒரு சிறந்த மனிதர் என நினைவில் நிற்க விரும்புகிறேன்.
டேவிஸ் கோப்பை தொடரில் எனது முதல் போட்டியில் தோற்றேன். தற்போது கடைசி போட்டியிலும் தோற்றுள்ளேன். டென்னிஸ் வாழ்க்கை என்ற வட்டம் முழுமை அடைந்தது. உண்மையில் இதுபோன்ற தருணத்தை யாரும் விரும்ப மாட்டர். எனக்கு ஆதரவாக இருந்த அனைவருக்கும் நன்றி.
இவ்வாறு அவர் கூறினார்.
கண்ணீருடன்...
மைதானத்தில் ரசிகர்கள் அனைவரும் நடால் குறித்த பாடலை பாடினர். கடந்த 20 ஆண்டுகளாக நடால் பெற்ற வெற்றி, முன்னாள் வீரர்கள் பெடரர், ஜோகோவிச், செரினா வில்லியம்ஸ், ஆன்டி முர்ரே, டேவிட் பெக்காம் (கால்பந்து), தற்போது விளையாடும் வீரர்கள் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர். இதைப் பார்த்து நடால் கண்ணீர் விட்டு அழுதார்.
காயம் தந்த தொல்லை
இடுப்பு பகுதி காயத்திற்கு 2023, ஜூன் மாதம் 'ஆப்பரேஷன்' செய்தார். தவிர வயிற்று பிரச்னையும் சேர்ந்து கொள்ள கடந்த இரு ஆண்டில் 24 போட்டியில் தான் விளையாடினார். இதில் 12 வெற்றி, 8 ல் தோல்வியடைந்தார்.
'ரசிகன்' பெடரர் வாழ்த்து
டென்னிஸ் அரங்கில் சுவிட்சர்லாந்தின் பெடரர், நடால் என இருவரும் பரம எதிரிகளாக செயல்படுவர். ஆனால் உண்மையில் நல்ல நண்பர்கள். நடால் ஓய்வு குறித்து பெடரர் எழுதிய கடிதம்:
டென்னிசில் நீங்கள் என்னை அதிகமுறை வீழ்த்தியுள்ளீர்கள். மற்ற எல்லோரையும் விட, அதிகமான சவால் கொடுத்தீர்கள். களிமண் களத்தில் உங்களுக்கு எதிராக விளையாடுவது கடினமானது. நான் மூடநம்பிக்கை இல்லாதவன். ஆனால் இதை அடுத்தகட்ட லெவலுக்கு கொண்டு சென்றீர்கள். தண்ணீர் பாட்டில்களை மைதானத்தில் வீரர்கள் நிற்பது போல வரிசையாக அடுக்கியது, தலைமுடி, உள்ளாடையை சரிசெய்தல் என நீங்கள் செய்த செயல்களை ரகசியமாக ரசித்தேன். ஏனெனில் இவை அனைத்தும் உங்களது தனித்துவத்தை வெளிப்படுத்தின.
20 ஆண்டு பயணத்தில் 14 பிரெஞ்ச் ஓபன் பட்டம் வென்று, ஸ்பெயினுக்கும், டென்னிஸ் உலகிற்கும் பெருமை சேர்த்தீர்கள். கடந்த 2022ல் லேவர் கோப்பை போட்டியில் இருவரும் இரட்டையரில் விளையாடியது, எனது மறக்க முடியாத தருணங்களில் ஒன்றாக உள்ளது. உங்களது இந்த பழைய நண்பன், எப்போதும் உற்சாகப்படுத்துவேன். வாழ்த்துகளுடன் உங்கள் ரசிகன்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
22 கிராண்ட்ஸ்லாம்
கிராண்ட்ஸ்லாம் ஒற்றையரில் அதிகமுறை கோப்பை வென்ற வீரர்கள் வரிசையில் நடால் 2வது இடத்தில் உள்ளார். இவர் 22 பட்டம் வென்றுள்ளார். முதலிடத்தில் செர்பியாவின் ஜோகோவிச் (24) உள்ளார்.
நடால் வென்ற கிராண்ட்ஸ்லாம் பட்டம்
கிராண்ட்ஸ்லாம் ஆண்டு
ஆஸி., ஓபன் 2009, 2022
பிரெஞ்ச் ஓபன் 2005-08, 2010-14, 2017-20, 2022
விம்பிள்டன் 2008, 2010
யு.எஸ்., ஓபன் 2010, 2013, 2017, 2019
'கோல்டன் ஸ்லாம்'
ஒற்றையர் பிரிவில் தொடர்ந்து நான்கு கிராண்ட்ஸ்லாம் போட்டியில் சாதித்து 'கேரியர் கிராண்ட்ஸ்லாம்' பட்டம் வென்றார் நடால். தவிர 2008 ஒலிம்பிக்கில் தங்கம் வென்றார். இதையடுத்து 'கேரியர் கோல்டன் கிராண்ட்லாம்' பட்டம் வென்ற மூன்று வீரர்களில் ஒருவர் ஆனார். அமெரிக்காவின் ஆன்ட்ரூ அகாசி, செர்பியாவின் ஜோகோவிச் இதுபோல அசத்தியுள்ளனர்.
36 மாஸ்டர்ஸ்
ஏ.டி.பி., மாஸ்டர்ஸ் ஒற்றையரில் அதிக முறை சாம்பியன் பட்டம் வென்ற வீரர்கள் வரிசையில் நடால் 2வது இடத்தில் உள்ளார். இவர், 36 முறை கோப்பை வென்றுள்ளார். இதில் மான்டி-கார்லோ (11 பட்டம்), இத்தாலி (10), கனடா (5), மாட்ரிட் (5), இந்தியன் வெல்ஸ் (3), ஹம்பர்க் (1), சின்சினாட்டி ஓபன் (1) அடங்கும். முதலிடத்தில் செர்பியாவின் ஜோகோவிச் (40 பட்டம்) உள்ளார்.
1080 வெற்றி
டென்னிஸ் ஒற்றையர் அரங்கில் 1307 போட்டிகளில் நடால் பங்கேற்றார். இதில் 1080ல் வெற்றி பெற்றார். 227ல் தோல்வியடைந்தார்.
ரூ. 1,138 கோடி
டென்னிஸ் வாழ்க்கையில் நடால் வென்ற பரிசுத் தொகை மொத்தம் ரூ. 1,138 கோடி. அதிகபட்சம் 2017ல் மட்டும் ரூ. 134 கோடி பரிசு தொகை பெற்றார்.
92 பட்டம்
ஏ.டி.பி., ஒற்றையர் பிரிவில் அதிக பட்டம் வென்ற வீரர்கள் வரிசையில் 5வது இடத்தில் உள்ளார் நடால். 131 முறை பைனலில் பங்கேற்ற நடால், 92ல் வெற்றி பெற்று பட்டம் வென்றார். முதல் நான்கு இடங்களில் அமெரிக்காவின் ஜிம்மி கானர்ஸ் (109 பட்டம்), சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் (103), செர்பியாவின் நோவக் ஜோகோவிச் (99), செக்குடியரசின் இவான் லெண்டில் (94) உள்ளனர்.
இரண்டு தங்கம்
ஒலிம்பிக்கில் இரண்டு தங்கம் வென்றுள்ளார் நடால். பீஜிங் ஒலிம்பிக் (2008) ஒற்றையரில் தங்கம் வென்ற இவர், ரியோ ஒலிம்பிக் (2016) இரட்டையரில் சகவீரர் மார்க் போபசுடன் இணைந்து தங்கத்தை தட்டிச் சென்றார்.
நான்கு முறை
டேவிஸ் கோப்பை அரங்கில் நடால் இடம் பெற்றிருந்த ஸ்பெயின் அணி 4 முறை (2004, 2009, 2011, 2019) சாம்பியன் பட்டம் வென்றது. இம்முறை காலிறுதியுடன் திரும்பியது.
11 பட்டம்
ஒற்றையரில் ஆதிக்கம் செலுத்திய நடால், இரட்டையர் பிரிவில் 11 பட்டம் மட்டும் வென்றுள்ளார். கிராண்ட்ஸ்லாம் இரட்டையரில் ஒரு பட்டம் கூட வென்றதில்லை.
இரண்டு பைனல்
ஏ.டி.பி., பைனல்ஸ் தொடரில் நடால் இதுவரை கோப்பை வென்றதில்லை. இரு முறை (2010, 2013) பைனல் வரை சென்றிருந்தார்.