ADDED : ஜூலை 06, 2026 11:38 PM

லண்டன்: விம்பிள்டன் டென்னிஸ் ஒற்றையர் பிரிவு காலிறுதிக்கு இத்தாலியின் ஜாஸ்மின் பாவோலினி முன்னேறினார்.
இங்கிலாந்தின் லண்டனில், விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடக்கிறது. பெண்கள் ஒற்றையர் பிரிவு 4வது சுற்றில் இத்தாலியின் ஜாஸ்மின் பாவோலினி, பிலிப்பைன்சின் அலெக்சாண்ட்ரா ஏலா மோதினர். இதில் பாவோலினி 6-4, 4-6, 6-3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்குள் நுழைந்தார்.
மற்றொரு 4வது சுற்றில் பெல்ஜியத்தின் எலிஸ் மெர்டென்ஸ், செக்குடியரசின் மேரி பவுஸ்கோவா மோதினர். இதில் மெர்டென்ஸ் 6-4, 6-4 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார். உக்ரைனின் மார்டா கோஸ்டியுக் 6-4, 6-4 என, அமெரிக்காவின் ஆஷ்லினை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.
மற்ற 4வது சுற்று போட்டிகளில் அமெரிக்காவின் கோகோ காப் 4-6, 6-3, 6-4 என, சுவிட்சர்லாந்தின் பெலிண்டா பென்சிக்கை வீழ்த்தினார். ஜப்பானின் நவோமி ஒசாகா 6-2, 7-6 என, பெலாரசின் அரினா சபலென்காவை தோற்கடித்தார்.
சின்னர் வெற்றி: ஆண்கள் ஒற்றையர் பிரிவு 4வது சுற்றில் 'நடப்பு சாம்பியன்' இத்தாலியின் ஜானிக் சின்னர், ஜப்பானின் ஷின்டாரோ மோசிசுகி மோதினர். இதில் சின்னர் 6-3, 7-6, 6-3 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார்.
மற்றொரு 4வது சுற்றில் ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினார், இத்தாலியின் பிளாவியோ கோபோலி மோதினர். இதில் ஏமாற்றிய அலெக்ஸ் டி மினார் 5-7, 6-7, 3-6 என தோல்வியடைந்தார்.
