/
செய்திகள்
/
விளையாட்டு
/
டென்னிஸ்
/
விம்பிள்டன்: அரையிறுதியில் ஸ்வியாடெக்
/
விம்பிள்டன்: அரையிறுதியில் ஸ்வியாடெக்
UPDATED : ஜூலை 09, 2025 10:53 PM
ADDED : ஜூலை 09, 2025 10:44 PM

லண்டன்: விம்பிள்டன் டென்னிஸ் அரையிறுதிக்கு போலந்தின் ஸ்வியாடெக், சுவிட்சர்லாந்தின் பென்சிக், இத்தாலியின் ஜானிக் சின்னர் முன்னேறினர்.
லண்டனில், விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடக்கிறது. பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் போலந்தின் இகா ஸ்வியாடெக், ரஷ்யாவின் சாம்சோனோவா மோதினர். முதல் செட்டை 6-2 என மிகச் சுலபமாக வென்ற ஸ்வியாடெக், 2வது செட்டை 7-5 என போராடி கைப்பற்றினார். ஒரு மணி நேரம், 49 நிமிடம் நீடித்த போட்டியில் ஸ்வியாடெக் 6-2, 7-5 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று, விம்பிள்டனில் முதன்முறையாக அரையிறுதிக்கு முன்னேறினார்.
மற்றொரு காலிறுதியில் சுவிட்சர்லாந்தின் பெலிண்டா பென்சிக், ரஷ்யாவின் மிர்ரா ஆன்ட்ரீவா மோதினர். இரண்டு மணி நேரம், 7 நிமிடம் நீடித்த போட்டியில் அசத்திய பென்சிக் 7-6, 7-6 என்ற கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைந்தார்.
பெண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் ஸ்வியாடெக் - பென்சிக், சபலென்கா (பெலாரஸ்) - அனிசிமோவா (அமெரிக்கா) மோதுகின்றனர்
அரையிறுதியில் சின்னர்
ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் உலகின் 'நம்பர்-1' இத்தாலியின் ஜானிக் சின்னர், அமெரிக்காவின் பென் ஷெல்டன் மோதினர். இதில் சின்னர் 7-6, 6-4, 6-4 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
இத்தாலி வீரர் ஓய்வுஇத்தாலி டென்னிஸ் வீரர் பேபியோ பாக்னினி 38. ஏ.டி.பி., ஒற்றையரில் 9 பட்டம் வென்றுள்ள இவர், விம்பிள்டன் முதல் சுற்றில் ஸ்பெயினின் கார்லஸ் அல்காரசிடம் போராடி தோல்வியடைந்தார். இந்நிலையில் நேற்று, சர்வதேச டென்னிஸ் போட்டியில் இருந்து ஓய்வை அறிவித்தார். கிராண்ட்ஸ்லாம் அரங்கில் 63வது முறையாக பங்கேற்ற போக்னினி, பிரெஞ்ச் ஓபனில் (2011) காலிறுதி வரை சென்றிருந்தார். இவர், 2015ல் யு.எஸ்., ஓபனில் கோப்பை வென்ற இத்தாலி வீராங்கனை பிளாவியா பென்னெட்டாவின் கணவர்.