/
செய்திகள்
/
விளையாட்டு
/
டென்னிஸ்
/
அரையிறுதியில் சபலென்கா * விம்பிள்டன் டென்னிசில்...
/
அரையிறுதியில் சபலென்கா * விம்பிள்டன் டென்னிசில்...
அரையிறுதியில் சபலென்கா * விம்பிள்டன் டென்னிசில்...
அரையிறுதியில் சபலென்கா * விம்பிள்டன் டென்னிசில்...
ADDED : ஜூலை 08, 2025 11:35 PM

லண்டன்: விம்பிள்டன் டென்னிஸ் பெண்கள் ஒற்றையர் அரையிறுதிக்கு முன்னேறினார் சபலென்கா.
லண்டனில், விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடக்கிறது. பெண்கள் ஒற்றையர் முதல் காலிறுதியில் உலகின் 'நம்பர்-1', பெலாரசின் சபலென்கா, ஜெர்மனியின் லாராவை (104) எதிர்கொண்டார். முதல் செட்டை சபலென்கா 4-6 என இழந்தார். பின் சுதாரித்துக் கொண்ட இவர், அடுத்த செட்டை 6-2 என எளிதாக வசப்படுத்தினார்.
மூன்றாவது, கடைசி செட் இழுபறியாக இருந்தது. இருவரும் 4-4 என சம நிலையில் இருந்தனர். பின் தொடர்ந்த இரு 'கேமை' கைப்பற்றிய சபலென்கா 6-4 என செட்டை வென்றார். 2 மணி நேரம், 54 நிமிடம் நடந்த போட்டியின் முடிவில் சபலென்கா, 4-6, 6-2, 6-4 என வெற்றி பெற்றார். மூன்றாவது முறையாக அரையிறுதிக்கு (2021, 2023, 2025) முன்னேறினார்.
மற்றொரு காலிறுதியில் அமெரிக்காவின் அனிசிமோவா, 6-1, 7-6 என்ற செட் கணக்கில் ரஷ்யாவின் பவ்லிசென்கோவாவை வென்று அரையிறுதிக்குள் நுழைந்தார்.
பெண்கள் ஒற்றையர் 4வது சுற்றில் போலந்தின் ஸ்வியாடெக், 6-4, 6-1 என்ற நேர் செட்டில் டென்மார்க்கின் கிளாரா டாசனை வீழ்த்தி, காலிறுதிக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் ரஷ்யாவின் மிர்ரா ஆன்ட்ரீவா, 6-2, 6-3 என அமெரிக்காவின் எம்மா நவாரோவை வீழ்த்தி, காலிறுதிக்குள் நுழைந்தார்.
அல்காரஸ் அபாரம்
ஆண்களுக்கான நான்காவது சுற்றில் ஸ்பெயினின் அல்காரஸ், 6-2, 6-3, 6-3 என்ற நேர் செட்டில் பிரிட்டனின் நோரியேவை சாய்த்து, காலிறுதிக்குள் நுழைந்தார்.
டிமிட்ரோவ் கண்ணீர்
ஆண்கள் ஒற்றையர் பிரிவு 4வது சுற்றில் உலகின் 'நம்பர்-1', இத்தாலியின் சின்னர், பல்கேரியாவின் டிமிட்ரோவ் (19 வது) மோதினர். முதல் இரு செட்டை வென்றார் டிமிட்ரோவ் (6-3, 7-5). அடுத்த செட் 2-2 என சமனில் இருந்தது. அப்போது, டிமிட்ரோவ் வலது பக்க மார்பு தசையில் காயம் ஏற்பட்டது. கையை கூட உயர்த்த முடியாத நிலையில் போட்டியில் இருந்து கண்ணீருடன் விடைபெற்றார். தொடர்ந்து 5வது கிராண்ட்ஸ்லாம் தொடரில், டிமிட்ரோவ் 34, காயத்தால் வெளியேறினார்.