/
உள்ளூர் செய்திகள்
/
அரியலூர்
/
எஸ்.ஐ., தாக்கியதால் மனம் உடைந்த பெண் கலெக்டர் அலுவலத்தில் தீக்குளிக்க முயற்சி
/
எஸ்.ஐ., தாக்கியதால் மனம் உடைந்த பெண் கலெக்டர் அலுவலத்தில் தீக்குளிக்க முயற்சி
எஸ்.ஐ., தாக்கியதால் மனம் உடைந்த பெண் கலெக்டர் அலுவலத்தில் தீக்குளிக்க முயற்சி
எஸ்.ஐ., தாக்கியதால் மனம் உடைந்த பெண் கலெக்டர் அலுவலத்தில் தீக்குளிக்க முயற்சி
ADDED : ஜூலை 26, 2011 12:38 AM
அரியலூர்: சொத்து பிரச்சனை காரணமாக தன்னை அவமானப்படுத்திய மீன்சுருட்டி எஸ்.ஐ., மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, அரியலூர் கலெக்டர் அலுவலகம் முன்ப தீக்குளிக்க வந்த பெண்ணை போலீஸார் தேடிப்பிடித்து, அவரிடமிருந்த மண்ணெண்ணெய் கேனையும் பறிமுதல் செய்தனர்.
அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி அருகே குமிளங்குழி கிராமத்தை சேர்ந்த சவரிமுத்து உடையார் மனைவி அருள்மேரி(57). இவரது மகள் கரோலின் என்ற பெண்ணுக்கும் அதே ஊரை சேர்ந்த அந்தோணி சாமி மகன் ஜோசப் சேவியர் என்பவருக்கும் ஏழு ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். ஜோசப் சேவியர் மனைவி குழந்தைகளை விட்டு விட்டு வெளியே சென்று விட்டார். இதையடுத்து தனது தாய் வீட்டில் தங்கியிருந்த கரோலின், பிழைப்புக்காக திருப்பூரில் உள்ள ஒரு பனியன் கம்பெனியில் பணியாற்றுகிறார். மகளுக்கு பாதுகாப்பாக அவளது அப்பா சவரிமுத்துவும் உடன் சென்றுள்ளார். குமிளங்குழி கிராமத்தில் உள்ள அருள் மேரியின் வீட்டு தோட்டத்தில் உள்ள மரம், தனது வீட்டு தோட்ட பகுதியில் பரவி உள்ளதால், அதை வெட்டி அப்புறப்படுத்த வேண்டும் என அந்தோணிசாமி கூறினார். இதுதொடர்பாக இரு தரப்பினருக்கிடையே தகராறு ஏற்பட்டது. அருள் மேரி தமிழக முதல்வருக்கு அனுப்பிய புகார் மனு அடிப்படையில், கடந்த சில தினங்களுக்கு முன் அங்கு விசாரிக்க சென்ற மீன்சுருட்டி எஸ்.ஐ., பாலசுப்ரமணியன், அந்தோணிசாமிக்கு ஆதரவாக பேசியதுடன், அருள் மேரி மற்றும் அவளது மகள் ஆகியோர் பற்றி தரக்குறைவான வார்த்தைகளால் திட்டி, அவரை அடித்து உதைத்ததாக கூறப்படுகிறது. மேலும் அந்தோணிசாமி மீது வேறு ஏதாவது புகார் கொடுத்தால், உன்மீதே வழக்கு போட்டு சிறையில் தள்ளி விடுவேன் எனவும் மிரட்டியுள்ளார். இதனால் மன உளச்சலுக்கு ஆளான அருள் மேரி, தனக்கு எந்த வகையிலும் பாதுகாப்பு இல்லை என்பதை வலியுறுத்தும் வகையில், நேற்று மண்ணெண்ணை கேனுடன் அரியலூர் கலெக்டர் அலுவலகத்துக்கு மனு கொடுக்க வந்தார். இதுபற்றி தகவறிந்த அரியலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜோதி மகாலிங்கம் மற்றும் போலீஸார், அரியலூர் கலெக்டர் அலுவலகத்துக்கு விரைந்து வந்து, அருள் மேரியை மடக்கி பிடித்ததுடன், அவரிடம் இருந்த மண்ணெண்ணெய் கேனையும் பறிமுதல் செய்தனர். அரியலூர் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் வைத்து, நேற்று மாலை ஐந்து மணி வரை விசாரிக்கப்பட்ட அருள் மேரி, மேல் விசாரணைக்காக, ஜெயங்கொண்டம் டி.எஸ்.பி., அலுவலகம் அனுப்பி வைக்கப்பட்டார். பாதிக்கப்பட்ட அருள் மேரிக்கு உரிய பாதுகாப்பு வழங்க, ஜெயங்கொண்டம் டி.எஸ்.பி., நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அரியலூர் எஸ்.பி., அலுவலகத்திலிருந்து உத்தரவிடப்பட்டுள்ளது.
அரியலூர் கலெக்டர் ஆபீஸ் முன் தீக்குளிப்பதற்காக மண்ணெண்ணெய் கேனுடன் பெண் வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.