/
உள்ளூர் செய்திகள்
/
அரியலூர்
/
பாதாள சாக்காடை திட்ட பணியில் மெத்தனம் சேறும், சகதியுமாக காட்சியளிக்கும் வீதிகள் பொறுப்பற்ற அதிகாரிகள
/
பாதாள சாக்காடை திட்ட பணியில் மெத்தனம் சேறும், சகதியுமாக காட்சியளிக்கும் வீதிகள் பொறுப்பற்ற அதிகாரிகள
பாதாள சாக்காடை திட்ட பணியில் மெத்தனம் சேறும், சகதியுமாக காட்சியளிக்கும் வீதிகள் பொறுப்பற்ற அதிகாரிகள
பாதாள சாக்காடை திட்ட பணியில் மெத்தனம் சேறும், சகதியுமாக காட்சியளிக்கும் வீதிகள் பொறுப்பற்ற அதிகாரிகள
ADDED : செப் 20, 2011 11:45 PM
அரியலூர்: அரியலூர் பாதாள சாக்கடை பணிகள், சரியான திட்டமிடலுடன் செயல்படுத்தப்படாததால், மழை காலத்தில் பொதுமக்கள் மிகுந்த இன்னலுக்கு ஆளாகியுள்ளனர்.
தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் 27.50 கோடி ரூபாய் மதிப்பில், அரியலூர் நகராட்சிக்கான பாதாள சாக்கடை அமைக்கும் பணிக்கான டெண்டர் கடந்த 2010 மே 21ம் தேதி விடப்பட்டது. ஆந்திர மாநிலம், ஹைதராபாத் நகரை சேர்ந்த ஏ பி ஆர் புராஜக்ட் பிரைவேட் லிட் என்ற நிறுவனம் சார்பில், அரியலூர் பாதாள சாக்கடை திட்ட பணிகள் நடந்து வருகிறது.
அரியலூர் கே.கே. நகரில் துவங்கி, ராஜாஜி நகர், பெரியார் நகர், காமராஜர் நகர் என, அரியலூர் நகரின் வடக்கு பகுதியில் உள்ள பல்வேறு தெருக்களிலும் பாதாள சாக்கடை திட்டத்துக்கான ஆளிறங்கு குழிகள் மற்றும் அவற்றை இணைக்கும் குழாய் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. ஆரம்ப கால கட்டத்தில் ஒப்பந்த விதிகளுக்கு உட்பட்டு பாதாள சாக்கடை திட்டத்துக்கான ஆளிறங்கு குழிகள் மற்றும் அவற்றை இணைக்கும் குழாய்கள் அமைக்கும் பணிகள் நடந்தது. ஆனால், கடந்த சில மாதங்களாக பாதாள சாக்கடை திட்டத்துக்கு தெருக்களில் பைப்லைன் அமைக்கும் பணிகள் சரிவர நடக்கவில்லை. ராஜாஜி நகர் இரண்டாவது தெருவில், பைப்லைன் மீது அமைக்கப்பட்ட காங்கிரீட் தளம் 10 மீட்டர் நீளத்துக்கு உடைந்து உள்வாங்கி விட்டது. இதனால் பொதுமக்கள் மழை காலத்தில், அந்த வீதியில் நடக்கவே அச்சப்படும் சூழ்நிலை நிலவுகிறது. பாதாள சாக்கடைக்கு பைப் லைன் அமைப்பதற்காக, ரோட்டின் நடுவிலிருந்து பொக்லைன் மூலமாக வெட்டி எடுக்கப்படும் மண்ணை உடனுக்குடன் அப்புறப்படுத்துவது இல்லை.
பைப்லைன் பதிக்கும் வேலையை ஏனோ தானோ என முடித்து விட்டு, அங்கிருந்து வெட்டி எடுக்கும் மண்ணை அப்புறப்படுத்தாமல், ரோட்டிலும் அருகில் உள்ள சாக்கடைகளிலும் வீசி விட்டு செல்லும் வேலையை மட்டுமே, பாதாள சாக்கடை திட்ட நிர்வாகிகள் செய்து வருகின்றனர். இப்படி செய்வதன் மூலம் நல்ல சாலைகள் அனைத்தும், பாதாள சாக்கடை திட்ட பணிகளுக்கு பிறகு சேறும், சகதியும் நிறைந்த, வயல் காட்டு பாதையாக காட்சியளிக்கிறது. இதனால் மேற்கண்ட தெருக்களில் வசிக்கும் பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகின்றனர்.
காமராஜ் நகர் இரண்டாவது தெருவில் பைப் லைன் அமைப்பதற்காக நடுரோட்டிலிருந்து வெட்டி எடுக்கப்பட்ட மண்ணை, அருகில் உள்ள சாக்கடையில் கொட்டியதன் மூலம், கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக அப்பகுதியின் கழிவு நீர், முறையாக வெளியேற முடியாமல் தேங்கி நிற்கிறது. அந்த பகுதி சாலைகள் சேறும் சகதியுமாக காட்சியளிக்கிறது.
'சாலைகளிலும் வடிகால்களிலும் கொட்டப்பட்டுள்ள மண்ணை அப்புறப்படுத்த வேண்டும்' என, அரியலூர் நகராட்சி நிர்வாக அதிகாரி, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய இணை பொறியாளர் உள்ளிட்ட அதிகாரிகளிடம், அப்பகுதி பொதுமக்கள் பலமுறை முறையிட்டுள்ளனர். ஆனால், எந்த நடவடிக்கையும் இல்லை. ஒவ்வொறு அதிகாரியும் ஏதாவது ஒரு காரணம் கூறி, தனது பொறுப்பை தட்டி கழித்து விடுகின்றனர். இதே நிலை நீடித்தால் வரும் அக்டோபர் மற்றும் நவம்பர் மாத அடை மழை காலத்தில், அரியலூர் ராஜாஜிநகர், காமராஜ் நகர், பெரியார் நகர் மற்றும் பாதாள சாக்கடை திட்ட பணிகள் நடைபெற்று வரும், அனைத்து தெருக்களிலும் வசிக்கும் மக்களுக்கு மிகுந்த இன்னல் ஏற்படும்.
'அரியலூர் கலெக்டர் உடனடி கவனம் செலுத்தி, அரியலூர் பாதாள சாக்கடை திட்ட பணிகளை முறையாகவும் செம்மையாகவும் செயல்படுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்' என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.