/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
வெளியூர் ஷேர் ஆட்டோக்களால் மாமல்லையில் கடும் அவதி
/
வெளியூர் ஷேர் ஆட்டோக்களால் மாமல்லையில் கடும் அவதி
ADDED : ஜன 15, 2024 01:50 AM

மாமல்லபுரம் : ஆதிபராசக்தி கோவில் பக்தர்களுக்காக, வேறு பகுதிகளின் ஷேர் ஆட்டோக்கள், மாமல்லபுரத்தில் குவிந்து, போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்துகின்றன.மாமல்லபுரம் நகர்ப் பகுதிக்குள் இயங்கும், உள்ளூர் ஷேர் ஆட்டோக்கள் குறைவு. தற்போது, ஆதிபராசக்தி அம்மன் கோவில் பக்தர்கள், இங்கு குவிகின்றனர்.
நகருக்குள், ஓரிடத்திலிருந்து, மற்றொரு இடத்திற்கு, அவர்களை ஏற்றிச் சென்று, வருமானம் சம்பாதிக்க கருதி, செங்கல்பட்டு, திருக்கழுக்குன்றம் உள்ளிட்ட பகுதிகளில் இயங்கும் ஷேர் ஆட்டோக்கள், இங்கு குவிகின்றன.
இங்கு குறுகிய 1.5 கி.மீ.,க்கு, பயணியரை ஏற்றிச் செல்ல, தலா 50 ரூபாய் வசூலிக்கப்படுகிறது, ஓட்டுனர்கள், கூடுதல் வருவாய் கருதி, அதிக நடை செல்ல, வேகமாகவும், தாறுமாறாகவும், வாகனங்களை முந்திச் சென்றும் ஓட்டுகின்றனர்.
பிரதான சாலையில், திடீரென தாறுமாறாக நிறுத்தி, பயணியரை இறக்கி ஏற்றுகின்றனர். அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கை நபர்களை ஏற்றாமல், ஏராளமானவர்களை அடைத்து, விபத்து அபாயத்துடன் செல்கின்றனர்.
கடற்கரை கோவில், ஐந்து ரதங்கள் பகுதிகளில் உள்ள, சுற்றுலா வாகன நிறுத்துமிட முகப்பில், அவை மறித்து நின்று, மற்ற வாகனங்கள் உள்ளே நுழையவோ, வெளியேறவோ இயலவில்லை.
கடும் நெரிசல் ஏற்பட்டு, போக்குவரத்து முடங்குகிறது. பாதசாரி பயணியர், விபத்து அச்சத்துடன் செல்கின்றனர். அவற்றால் கடை வியாபாரம் பாதிக்கப்படுவதாகவும், கட்டுப்படுத்த வலியுறுத்தியும் கோரி, கடைக்காரர்கள் போராடியும் உள்ளனர். போலீசார், அவற்றை கட்டுப்படுத்த, இப்பகுதியினர், சுற்றுலா பயணியர் வலியுறுத்துகின்றனர்.