/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
குடிநீர் தட்டுப்பாடு: சாலை மறியல்- 3 வார்டு உறுப்பினர்கள் ராஜினாமா
/
குடிநீர் தட்டுப்பாடு: சாலை மறியல்- 3 வார்டு உறுப்பினர்கள் ராஜினாமா
குடிநீர் தட்டுப்பாடு: சாலை மறியல்- 3 வார்டு உறுப்பினர்கள் ராஜினாமா
குடிநீர் தட்டுப்பாடு: சாலை மறியல்- 3 வார்டு உறுப்பினர்கள் ராஜினாமா
ADDED : ஜன 15, 2024 02:00 AM

பவுஞ்சூர் : பவுஞ்சூர் அருகே செம்பூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில், 1,000க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
செம்பூர் ஊராட்சிக்கு 20 ஆண்டுகளுக்கு முன், கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் 60,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைக்கப்பட்டு பாலாற்றில் இருந்து தண்ணீர் ஏற்றப்பட்டது.
முதல் தெரு, நடுத்தெரு, மேட்டுத்தெரு மற்றும் காலனி பகுதிக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது.
அப்போது ஏற்பட்ட தண்ணீர் பற்றாக்குறை காரணமாக, காலனி பகுதிக்கு வழங்கப்பட்ட இணைப்பு துண்டிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.அப்பகுதி மக்களுக்கு தனியாக புதிதாக குடிநீர் கிணறு அமைக்கப்பட்டு அதன் மூலமாக தற்போது குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் காலனி பகுதி மக்கள், பாலாற்றில் இருந்து வரும் குடிநீர் தங்கள் பகுதிக்கும் வினியோகம் செய்ய வேண்டும் என அதிகாரிகளிடம் மனு அளித்து வந்த நிலையில், அதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதையடுத்து, மதுராந்தகம் வருவாய் கோட்டாட்சியர் தியாகராஜன், செய்யூர் வட்டாட்சியர் சரவணன், செய்யூர் வி.சி.க., - எம்.எல்.ஏ., பாபு ஆகியோர் நேரில் சென்று கிராம மக்களிடம் பேச்சு நடத்தி, காலனி பகுதிக்கு புதிய இணைப்பு ஏற்படுத்த அதிகாரிகளிடம் தெரிவிக்கப்பட்டு, நேற்று முன்தினம் இரவு புதிய இணைப்பு ஏற்படுத்தப்பட்டது.
இந்நிலையில், கிராமப் பகுதியில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டதால், காலி குடங்களுடன் கிராம மக்கள், சேவூர் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சம்பவ இடத்திற்கு வந்த, செய்யூர் வட்டாட்சியர் சரவணன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சு நடத்தினர்.
எந்த தீர்வும் எட்டப்படாததால், செம்பூர் ஊராட்சி துணைத் தலைவர் கலைச்செல்வி, முருகன் மற்றும் தீனதயாளன் ஆகிய மூன்று வார்டு உறுப்பினர்களும் பதவியில் இருந்தும் கிராம மக்களின் குடிநீர் பிரச்னையை தீர்க்க முடியவில்லை எனக் கூறி ராஜினாமா கடிதத்தை வட்டார வளர்ச்சி அலுவலரிடம் வழங்கினர்.
தற்போது நேரடியாக வழங்கப்பட்டு உள்ள இணைப்பை அகற்றிவிட்டு, மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் இருந்து காலனி பகுதிக்கு குடிநீர் இணைப்பு ஏற்படுத்த வேண்டும் என கிராம மக்கள் சார்பாக கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது.