/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
செங்கையின் 14 ஊராட்சிகள் சென்னையுடன்... இணைப்பு! உள்கட்டமைப்பு பணிகளை மேம்படுத்த திட்டம்
/
செங்கையின் 14 ஊராட்சிகள் சென்னையுடன்... இணைப்பு! உள்கட்டமைப்பு பணிகளை மேம்படுத்த திட்டம்
செங்கையின் 14 ஊராட்சிகள் சென்னையுடன்... இணைப்பு! உள்கட்டமைப்பு பணிகளை மேம்படுத்த திட்டம்
செங்கையின் 14 ஊராட்சிகள் சென்னையுடன்... இணைப்பு! உள்கட்டமைப்பு பணிகளை மேம்படுத்த திட்டம்
ADDED : மே 13, 2024 06:07 AM

சென்னை மாநகராட்சியில் உள்ள 200 வார்டுகளுடன், புறநகரில், எட்டு சட்டசபை தொகுதிகளில் உள்ள, 50 ஊராட்சிகளை சேர்க்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதன்படி, 250 வார்டுகளாக உயர்வதுடன், சட்டசபை தொகுதி வாரியாக, மண்டலங்களில் எண்ணிக்கையும் அதிகரிக்கும். இதற்கான அறிவிப்பு, இந்த ஆண்டு இறுதிக்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை மாநகராட்சி, 174 சதுர கி.மீ., பரப்பில், 155 வார்டுகளை உடைய 10 மண்டலமாக செயல்பட்டது.
நாட்டின் பெருநகர பட்டியலில் சென்னையை சேர்க்கும் வகையில், புறநகரின் ஒன்பது நகராட்சிகள், எட்டு பேரூராட்சிகள் மற்றும் 25 ஊராட்சிகளை ஒருங்கிணைத்து, 424 சதுர கி.மீ., பரப்பில், 2011ல் மாநகராட்சி எல்லை விரிவாக்கம் செய்யப்பட்டது.
15 மண்டலங்கள்
அதன்படி, 200 வார்டுகள், 15 மண்டலங்கள் உடைய மாநகராட்சியாக செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், விரிவாக்க மாநகராட்சியில் உள்ள வருவாய்த் துறை எல்லைகள், சென்னை மாவட்டத்துடன் இணைக்க முடிவு செய்யப் பட்டது.
அதன்படி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் குறிப்பிட்ட பகுதிகள், சென்னை மாவட்டத்தில் சேர்ந்தன.
தொடர்ந்து, புறநகரில் உள்ள நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளைச் சேர்த்து, தாம்பரம் மற்றும் ஆவடி தனி மாநகராட்சி உருவாக்கப்பட்டது.
சென்னை மாநகராட்சி எல்லையில், 22 சட்டசபை தொகுதிகள் உள்ளன. மக்கள் தொகை அதிகரிப்பு, துரித சேவை, நிர்வாக வசதி போன்ற காரணங்களால், சட்டசபை தொகுதியை அடிப்படையாக வைத்து, மண்டலங்கள் உருவாக்க திட்டமிடப்பட்டன. சோழிங்கநல்லுார் தொகுதியில், இரண்டு மண்டலங்கள் உள்ளன.
இதேபோல் மற்ற தொகுதிகளையும் கணக்கிட்டு, தற்போதுள்ள 15 மண்டலங்களை 23 மண்டலங்களாகப் பிரித்து, கடந்த ஆண்டு, ஏப்., மாதம் முதல் நடைமுறைக்கு கொண்டுவர திட்டமிடப்பட்டது.
ஆனால், ஒரே தொகுதியில் இரு மண்டல தலைவர்கள், நிர்வாகக் குளறுபடி, நிதி ஒதுக்கீடு போன்ற காரணங்களால், மண்டலங்கள் பிரிப்பதற்கான இறுதி வரையறை நிலுவையில் உள்ளது.
இந்நிலையில், சென்னை மாநகராட்சி எல்லையை மீண்டும் விரிவாக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது.
50 ஊராட்சிகள்
செங்கல்பட்டு மாவட்டத்தில் திருப்போரூர், சோழிங்கநல்லுார்; திருவள்ளூர் மாவட்டத்தில் மதுரவாயல், பூந்தமல்லி, மாதவரம், பொன்னேரி மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆலந்துார், ஸ்ரீபெரும்புதுார் ஆகிய சட்டசபை தொகுதியில் உள்ள, 50 ஊராட்சிகளை, சென்னையுடன் சேர்க்க திட்டமிடப்பட்டு உள்ளது.
இதுகுறித்து, மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:
சென்னை மாநகராட்சியை ஒட்டி உள்ள ஊராட்சிகள், அபார வளர்ச்சி அடைந்துள்ளன. வளர்ச்சிக்கு ஏற்ப, கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது அவசியம்.
இதனால், எட்டு சட்டசபை தொகுதிகளுக்கு உட்பட்ட 50 ஊராட்சிகளை, சென்னையுடன் இணைத்து, 250 வார்டுகளாக மாற்றப்பட உள்ளது. இதோடு, சட்டசபை தொகுதி அடிப்படையில் மண்டலங்களும் அதிகரிக்கும்.
தற்போதுள்ள வார்டுகளின் பரப்பு, மக்கள் தொகை அடிப்படையில் வரையறையும் செய்ய வேண்டி உள்ளது.
கூடுதல் நிதி
சென்னை மாநகராட்சி விரிவடையும்போது, வரி வருவாய் பெருகும். மத்திய அரசிடம் இருந்து கூடுதல் நிதி கிடைக்கும். நிதியுதவி வழங்கும் நிறுவனங்களிடம் இருந்தும், கூடுதல் நிதி பெற முடியும்.
இதனால், உள்கட்டமைப்பில் அதிகளவில் கவனம் செலுத்தப்பட்டு, போதுமான வசதிகள் கொண்டு வரப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
-நமது நிருபர்- -