/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கேளம்பாக்கத்தில் ரூ.3 கோடியில் நாய்கள் கருத்தடை சிகிச்சை அரங்கு
/
கேளம்பாக்கத்தில் ரூ.3 கோடியில் நாய்கள் கருத்தடை சிகிச்சை அரங்கு
கேளம்பாக்கத்தில் ரூ.3 கோடியில் நாய்கள் கருத்தடை சிகிச்சை அரங்கு
கேளம்பாக்கத்தில் ரூ.3 கோடியில் நாய்கள் கருத்தடை சிகிச்சை அரங்கு
ADDED : ஆக 08, 2024 02:00 AM

திருப்போரூர்,:தமிழகம் முழுதும், தெரு நாய்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. குழந்தைகள் முதல் பெரியோர் வரை, அனைவரும் நாய்கடிக்கு உள்ளாகின்றனர். பாதிக்கப்பட்ட மக்கள் நாய்களை கட்டுப்படுத்த வேண்டும் என, அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
அதை ஏற்று, நாய்களின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கும்படி, உள்ளாட்சி அமைப்புகளுக்கு அரசு அறிவுறுத்தியுள்ளது.
மேலும், தெரு நாய்களால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்பை தடுக்க, நாய்கள் கருத்தடை அறுவை சிகிச்சை மையம் அமைக்கவும், அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
அந்த வகையில், திருப்போரூர் வட்டம், கேளம்பாக்கத்தில் கால்நடை மருத்துவமனையை ஒட்டி, 3 கோடி ரூபாய் மதிப்பில், நாய்கள் கருத்தடை அறுவை சிகிச்சை மையம் அமைக்க, நிதி ஒதுக்கீடு செய்து, இடமும் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
ஒரு ஏக்கர் பரப்பு இடத்தில், மையங்களுக்கு கட்டடம் கட்டவும், நாய்களை பிடித்து செல்ல, தனி வாகனம் வாங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், மேற்கண்ட இடத்தை கலெக்டர் அருண்ராஜ் நேற்று நேரில் சென்று பார்வையிட்டு, விபரங்களை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். இடத்தை துாய்மைபடுத்தி, விரைவில் கட்டட பணி துவங்கவும், அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். மருந்து இருப்பு, பராமரிக்கும் முறை குறித்து ஆலோசனை கூறினார்.
அப்போது, கால்நடை மருத்துவர், உதவியாளர் காலிபணியிடங்களை நிரப்ப வேண்டும் என, அப்பகுதிவாசிகள் வேண்டுகோள் விடுத்தனர்.
கருத்தடை மையத்திற்கு தேர்வான இடம், எங்கள் பகுதி இளைஞர்கள் விளையாட பயன்படுத்தி வருகின்றனர் என, கலெக்டரிடம் தெரிவித்தனர்.
அதற்கு கலெக்டர், அருகே மாற்று இடத்தை துாய்மைப்படுத்தி, விளையாட்டு மைதானம் அமைத்து தருகிறோம் என, உறுதியளித்தார். தொடர்ந்து, கோவளத்தில் உள்ள நாய்கள் காப்பகத்திற்கு சென்று, கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.