/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
முன்பகையில் நடந்த கொலை 4 பேருக்கு ஆயுள் தண்டனை
/
முன்பகையில் நடந்த கொலை 4 பேருக்கு ஆயுள் தண்டனை
ADDED : ஏப் 25, 2024 09:54 PM
சென்னை:சென்னை, வியாசர்பாடி, பி.வி.காலனி பகுதியைச் சேர்ந்தவர் கலைச்செல்வன், 28. இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த கண்ணன் என்ற ஞானசேகரன் என்பவருக்கும் இடையே, ஏற்கனவே முன் விரோதம் இருந்துள்ளது.
இதேபோல, வியாசர்பாடி பி.வி.காலனி பகுதியைச் சேர்ந்த ராமலிங்கத்தின் சகோதரர் மூர்த்தி என்பவருடனும், கண்ணனுக்கு முன் விரோதம் இருந்துள்ளது.
இந்த பகையை மனதில் வைத்த கலைச்செல்வன், தன் நண்பர்களான வியாசர்பாடி அன்னை சந்தியா நகரைச் சேர்ந்த அருண்குமார், 28, ராமலிங்கம், 41 மற்றும் திருவள்ளூர் கடம்பத்துாரைச் சேர்ந்த மைக்கேல்,24 ஆகியோருடன் இணைந்து, 2017 டிச.,15ல் வீட்டில் இருந்த கண்ணனை வெட்டிக் கொலை செய்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து, கண்ணன் மனைவி முத்துமாரி கொடுத்த புகாரின்படி, எம்.கே.பி., நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அருண்குமார், கலைச்செல்வன், மைக்கேல், ராமலிங்கம் ஆகியோரை கைது செய்தனர். பின், அவர்கள் ஜாமினில் வெளிவந்தனர்.
வழக்கு விசாரணை, சென்னை மாவட்ட கலெக்டர் வளாகத்தில் உள்ள 17வது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி எல்.ஆபிரகாம் லிங்கன் முன் நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, நான்கு பேருக்கும் ஆயுள் தண்டனையும், தலா 5,000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

