ADDED : செப் 09, 2024 02:13 AM
தாம்பரம்:தாம்பரம் மாநகராட்சி, மண்டலம் இரண்டில் ஈசா பல்லாவரம் தொடக்கப்பள்ளி, ஜமீன் பல்லாவரம் தொடக்கப்பள்ளி, ஜமீன் பல்லாவரம் மேல்நிலை, கீழ்க்கட்டளை நடுநிலைப் பள்ளிகள் உள்ளன.
மண்டலம் 5ல் வினோபா நகர் நடுநிலை, மாடம்பாக்கம் தொடக்க பள்ளிகளில், மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, வசதிகள் இல்லை. இதனால், இங்கு பயிலும் மாணவர்கள், சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.
கூடுதல் வகுப்பறை இல்லாததால், மரத்தடியில் அமர்ந்து படிக்கும் சூழல் நிலவுகிறது. போதிய வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும் என, அந்தந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கோரிக்கை வைத்தனர்.
இதையடுத்து, மேற்கண்ட ஆறு பள்ளிகளில், 3.40 கோடி ரூபாய் செலவில் போதிய வசதிகளை ஏற்படுத்த, மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
அதன்படி, மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப கூடுதல் வகுப்பறை, கழிப்பறை, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், பழுதடைந்துள்ள சுற்றுச்சுவர் சீரமைத்தல், மின் விளக்கு, பள்ளி வளாகத்தில் சிமென்ட் கற்கள் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.