/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கிளாம்பாக்கத்தில் அமைகிறது காலநிலை அறிவுசார் பூங்கா
/
கிளாம்பாக்கத்தில் அமைகிறது காலநிலை அறிவுசார் பூங்கா
கிளாம்பாக்கத்தில் அமைகிறது காலநிலை அறிவுசார் பூங்கா
கிளாம்பாக்கத்தில் அமைகிறது காலநிலை அறிவுசார் பூங்கா
ADDED : ஜூலை 31, 2024 04:44 AM

சென்னை : சென்னையில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வாக, வண்டலுார் அடுத்த கிளாம்பாக்கத்தில், 40 ஏக்கர் பரப்பளவில், 400 கோடி ரூபாய் மதிப்பீட்டில், புதிய புறநகர் பேருந்து நிலையம் கட்டப்பட்டது.
இந்த வளாகம், 2023 டிச., 30ம் தேதி திறக்கப்பட்டது.
இந்த வளாகத்தை ஒட்டி பாரம்பரிய சின்னங்கள் உள்ள பகுதி, தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு, கட்டுமானப் பணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், இப்பகுதி பேருந்து நிலைய திட்டத்தில் இருந்து விடுவிக்கப்பட்டது.
இந்நிலையில், இப்பகுதியை பூங்காவாக மேம்படுத்த, சி.எம்.டி.ஏ., திட்டமிட்டது. தொல்லியல் துறை விதிகளுக்கு உட்பட்டு, இதற்கான திட்டம் உருவாக்கப்பட்டது.
இதன்படி, இங்கு பாரம்பரிய சின்னங்களுக்கு பாதிப்பு இல்லாமல் கால நிலை அறிவுசார் பூங்கா அமைக்க, சி.எம்.டி.ஏ., முடிவு செய்தது.
இந்திய தொல்லியல் துறையான ஏ.எஸ்.ஐ., அமைப்பு, பல்வேறு நிபந்தனைகள் அடிப்படையில் இதற்கு அனுமதி வழங்கி உள்ளது.
சி.எம்.டி.ஏ., அதிகாரி ஒருவர் கூறியதாவது:
கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையத்தை ஒட்டி, 16.90 ஏக்கர் நிலம் உள்ளது.
காலநிலை அறிவுசார் பூங்கா பணிகள், 14.76 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நாட்டில் முதல் கால நிலை மற்றும் தொல்லியல் அறிவுசார் பூங்காவாக, இது அமைகிறது.
இங்கு பாரம்பரிய சின்னங்கள் உள்ளதாக தொல்லியல் துறை குறிப்பிட்டுள்ள இடங்களுக்கு பாதிப்பு வராமல், பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பாரம்பரிய சின்னங்கள், வரலாறு தொடர்பாக பொதுமக்களுக்கு விளக்கம் அளிக்கும் வகையில், சிறப்பு மையம் அமைக்கப்படும். யோகா பயிற்சி மற்றும் கால நிலை மாற்றம் தொடர்பான விளக்க மையம் ஆகியவை, இங்கு ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.
அடிப்படை பணிகள் முடிந்து, இந்த பூங்கா பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ளன. விரைவில் இது திறப்பு விழாவிற்கு தயாராகிவிடும்.
இவ்வாறு அவர் கூறினார்.