/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
வைப்பு தொகை செலுத்தியும் 12 ஆண்டாக தரம் உயராத பள்ளி
/
வைப்பு தொகை செலுத்தியும் 12 ஆண்டாக தரம் உயராத பள்ளி
வைப்பு தொகை செலுத்தியும் 12 ஆண்டாக தரம் உயராத பள்ளி
வைப்பு தொகை செலுத்தியும் 12 ஆண்டாக தரம் உயராத பள்ளி
ADDED : ஆக 27, 2024 01:06 AM
திருப்போரூர் : திருப்போரூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட காயார் ஊராட்சியில், சின்ன காயார், ஈச்சங்காடு உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. இந்த ஊராட்சியின் அருகே வெண்பேடு, பனங்காட்டுப்பாக்கம், கொளத்துார் உள்ளிட்ட ஊராட்சிகளும் உள்ளன.
காயாரில், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளி, 1932ல் துவக்கப் பள்ளியாகவும், 1980ல் நடுநிலைப் பள்ளியாகவும் தரம் உயர்த்தப்பட்டது.
தற்போது, இந்தப் பள்ளியில், 200-க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் படித்து வருகின்றனர். அப்பகுதி மாணவர்கள், உயர்நிலைப் பள்ளியில் படிக்க, 9 கி.மீ., தொலைவில் உள்ள மாம்பாக்கம், 7 கி.மீ., தொலைவில் உள்ள தையூர், 6 கி.மீ., தொலைவில் உள்ள இள்ளலுார், 8 கி.மீ., தொலைவில் உள்ள நெல்லிக்குப்பம் செல்ல வேண்டிய நிலை உள்ளது.
இந்த நிலையை தடுக்கும் வகையில், இப்பள்ளியை உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த, கிராம மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதை ஏற்ற பள்ளிக் கல்வித்துறை, பள்ளியை தரம் உயர்த்த கிராம மக்கள் சார்பில், 1 லட்சம் ரூபாய் வைப்புத் தொகை செலுத்த உத்தரவிட்டது.
இதையடுத்து, கிராம மக்கள் இணைந்து, 1 லட்சம் ரூபாய் பணம் திரட்டி, கடந்த 2013-ம் ஆண்டு வைப்புத் தொகையை செலுத்தினர். 12 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், தற்போது வரை இப்பகுதி மக்களின் உயர்நிலைப் பள்ளி கனவு நிறைவேறாமலேயே உள்ளது.
இதுகுறித்து, அப்பகுதிவாசிகள் கூறியதாவது:
மாணவர்களின் நலன் மற்றும் பாதுகாப்பு கருதி, எங்கள் ஊர் பள்ளியை தரம் உயர்த்த, எம்.எல்.ஏ., - எம்.பி., உள்ளாட்சி பிரதிநிதிகள் கவனம் செலுத்தி உதவ வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.