/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
குடியிருப்புக்கு நடுவே தொழுவம்; மறைமலை நகரில் மக்கள் அவதி
/
குடியிருப்புக்கு நடுவே தொழுவம்; மறைமலை நகரில் மக்கள் அவதி
குடியிருப்புக்கு நடுவே தொழுவம்; மறைமலை நகரில் மக்கள் அவதி
குடியிருப்புக்கு நடுவே தொழுவம்; மறைமலை நகரில் மக்கள் அவதி
ADDED : செப் 15, 2024 11:21 PM

மறைமலை நகர் : மறைமலை நகர் நகராட்சி, கீழக்கரணை பகுதியில், 2,000த்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.
மேலும், வட மாநிலத்தை சேர்ந்த நுாற்றுக்கும் மேற்பட்டோர், குடும்பத்துடன் தங்கி, மறைமலை நகர் சிப்காட் பகுதியில் உள்ள தொழிற்சாலைகளில் வேலை பார்த்து வருகின்றனர்.
இங்கு, காமராஜர் சாலையில் இருந்து, அரசு துவக்கப்பள்ளி செல்லும் தெருவில், குடியிருப்புகளுக்கு நடுவே உள்ள காலி இடத்தில், தனி நபர்கள் சிலர் மாடுகள் வளர்த்து வருகின்றனர்.
இதன் காரணமாக, இந்த பகுதியில் நாளுக்கு நாள் கொசுத்தொல்லை அதிகரித்து வருவதோடு, குழந்தைகளுக்கு அடிக்கடி காய்ச்சல் உள்ளிட்டவை வருகின்றன.
இது குறித்து குடியிருப்புவாசிகள் கூறியதாவது:
குடியிருப்புகளுக்கு நடுவே மாடுகளை வளப்பதோடு, அவற்றை முறையாக பராமரிக்காததால், இந்த பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. மாட்டு சாணத்தை அப்புறப்படுத்தாமல், நகராட்சி சார்பில் அமைக்கப்பட்டு உள்ள கழிவுநீர் கால்வாயில் கொட்டுகின்றனர். இதனால், கழிவு நீர் தேங்கி, கொசு உற்பத்தி அதிகரிக்கிறது.
மேலும், மாடுகளுக்கு தீவனமாக, கேன்டீன்களில் மீதம் உள்ள உணவுகளை கொண்டு வந்து கொட்டுவதால், இந்த பகுதியில் எலித்தொல்லை அதிகரித்து உள்ளது.
இது குறித்து, மறைமலை நகர் நகராட்சி அலுவலகத்தில் புகார் அளித்தும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, மாவட்ட நிர்வாகம் தலையிட்டு, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.