/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பாலாற்றங்கரை மண் சுரண்டல் செங்கல் சூளைகள் அடாவடி
/
பாலாற்றங்கரை மண் சுரண்டல் செங்கல் சூளைகள் அடாவடி
ADDED : மே 30, 2024 09:59 PM
திருக்கழுக்குன்றம்:ஆனுார் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் செயல்படும் செங்கல் சூளைகளின் தேவைக்காக, பாலாற்றங்கரையில் மண் சுரண்டப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
திருக்கழுக்குன்றம் அடுத்த ஆனுார், ஆலவாய், எலுமிச்சம்பட்டு உள்ளிட்ட பகுதிகள், பாலாற்றங்கரையில் உள்ளன. அப்பகுதிகளைச் சேர்ந்த பலர், தங்கள் பட்டா இடத்தில் செங்கல் சூளைகள் நடத்துகின்றனர்.
சொந்த இடத்தில் அமைக்கப்பட்ட சூளையாக இருப்பினும், மூன்றடி ஆழத்திற்கே மண் எடுக்க வேண்டும் என்பது அரசு விதி. ஆனால், பல அடி ஆழத்திற்கு, அனுமதியின்றி மண் எடுக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதனால், விவசாய நிலங்கள் மிகவும் பள்ளமாகி, விவசாயம் பாதிக்கப்படுகிறது. ஆற்றுப்படுகை ஊற்றுநீர் கால்வாய்களும் துார்க்கப்படுகின்றன.
பாலாற்றங்கரை பகுதியிலும் மண் சுரண்டப்பட்டு, கரை பலவீனமடைந்து வருகிறது. வெள்ளப்பெருக்கின் போது, ஊருக்குள் வெள்ளம் புக வாய்ப்புள்ளது.
செங்கல் சூளைகளுக்காக, அதிக ஆழத்திற்கு தோண்டி மண் எடுப்பதையும், பாலாற்றங்கரை அழிக்கப்படுவதையும் தடுக்க, வருவாய்த் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கோரி, ஆலவாய் பகுதியைச் சேர்ந்த தரணிராஜன் என்பவர், வருவாய்த் துறையினரிடம் முறையிட்டுள்ளார்.