ADDED : மார் 23, 2024 10:54 PM

மாமல்லபுரம்:காஞ்சிபுரம் லோக்சபா தொகுதியில் தி.மு.க., வேட்பாளராக, தற்போதைய தி.மு.க., - எம்.பி., செல்வம் மீண்டும் போட்டியிடுகிறார்.
அ.தி.மு.க., வேட்பாளராக, ஜெயலலிதா பேரவை துணை செயலர் ராஜசேகர், பா.ஜ., கூட்டணியில் பா.ம.க., வேட்பாளராக ஜோதி வெங்கடேசன் போட்டியிடுகின்றனர்.
அந்தந்த கட்சித் தலைமை வேட்பாளரை அறிவித்ததும், தொகுதியின் முக்கிய பகுதிகளுக்கு வேட்பாளர்கள் சென்று, தங்கள் கட்சி மற்றும் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகளை மரியாதை நிமித்தமாக சந்தித்து, ஆதரவு கேட்பது வழக்கம். தி.மு.க., - அ.தி.மு.க., வேட்பாளர்கள் முன்பே அறிவிக்கப்பட்டனர்.
தி.மு.க., செல்வம், புதுப்பட்டினம் மற்றும் திருக்கழுக்குன்றம் பகுதிகளில், கட்சி நிர்வாகிகளை சந்தித்தார். நேற்று, அ.தி.மு.க.,வைச் சேர்ந்த ராஜசேகர், திருக்கழுக்குன்றம் நிர்வாகிகளை சந்தித்தார். பா.ம.க., வேட்பாளர், தாமதமாக நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டார்.
மாமல்லபுரம் உள்ளிட்ட பகுதிகளில் நிர்வாகிகளை நேற்று சந்தித்தார். மூன்று வேட்பாளர்களும், நாளை பகல் 12:00 மணிக்கு, காஞ்சிபுரத்தில் வேட்புமனு தாக்கல் செய்வதாக, கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

