/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
தாம்பரம், கூடுவாஞ்சேரியில் கஞ்சா விற்பனை அமோகம் கூலி தொழிலாளிகளை குறி வைத்து வியாபாரம்
/
தாம்பரம், கூடுவாஞ்சேரியில் கஞ்சா விற்பனை அமோகம் கூலி தொழிலாளிகளை குறி வைத்து வியாபாரம்
தாம்பரம், கூடுவாஞ்சேரியில் கஞ்சா விற்பனை அமோகம் கூலி தொழிலாளிகளை குறி வைத்து வியாபாரம்
தாம்பரம், கூடுவாஞ்சேரியில் கஞ்சா விற்பனை அமோகம் கூலி தொழிலாளிகளை குறி வைத்து வியாபாரம்
ADDED : மார் 09, 2025 11:41 PM
தாம்பரம் மற்றும் சுற்றுப் பகுதியில் பல லட்சம் கூலித் தொழிலாளர்கள் வசிக்கின்றனர். இவர்களை மையப்படுத்தி, கஞ்சா விற்பனை இப்போது களைகட்டத் துவங்கி உள்ளது. இதனால், புறநகர் பகுதியில் குற்றச் செயல்கள் அதிகரிக்கும் என, பொது மக்கள் புகார் எழுப்பி உள்ளனர்.
குறைந்த முதலீடு, மிக அதிக லாபம். ஒரு முறை இந்த பழக்கத்திற்கு ஆட்பட்டவர்கள், அதிலிருந்து எளிதில் மீள முடியாமல் நிரந்தர வாடிக்கையாளர்களாக மாறுவதால், 'கஸ்டமர்' எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பது உள்ளிட்ட காரணங்களால், தமிழகத்தில் கடந்த நான்கு ஆண்டாக கஞ்சா விற்பனை தொடர்ந்து அதிகரிக்கிறது.
பயம்
இந்த சமூக விரோத செயலில் ஈடுபடுவோரை கண்டுபிடித்து தண்டிக்க, தமிழக காவல் துறை பலகட்ட 'ஆபரேஷன்' திட்டம் வகுத்தும், அவர்களுக்கு போக்கு காட்டி, நுாதன முறையில் கடத்தி வரப்படும் கஞ்சாவின் விற்பனை, இப்போது சென்னை புறநகர் பகுதியிலும் களைகட்டத் துவங்கியிருப்பது பொது மக்களிடம் பீதியை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த பிப்., 19ல் வண்டலுார் ரயில் நிலையம் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட மணிகண்டன், 19: சம்பத்குமார், 23: ஆகிய இரு இளைஞர்களை போலீசார் விரட்டிப் பிடித்து கைது செய்தனர். அவர்களிடமிருந்து 2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
விசாரணையில், அவர்கள் கொலைக் குற்றவாளிகள் என்பது தெரியவந்தது.
பிப்., 21 அன்று, கூடுவாஞ்சேரி ரயில் நிலையம் அருகே விஸ்வநாதன், 32, என்ற வாலிபரிடமிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்
பிப். 23ல், கண்ணகி நகர் சுற்றுப்பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட, ஏழு நபர்களிடமிருந்து 22.5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
தொடர்ந்து பிப்., 25ம் தேதி, தாம்பரம் அடுத்த இரும்புலியூரில், மேற்கு வங்கத்தை சேர்ந்த, மோட்டிபுல் சேக், 30, என்ற வடமாநில இளைஞர் டிராலி சூட்கேசில் கடத்திவந்த 22 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். விசாரணையில், ஒடிசாவில் இருந்து ரயில் வாயிலாக கஞ்சாவை கடத்தியது தெரிய வந்தது.
விசாரணை
கடந்த 4ம் தேதி, திரிபுரா மாநிலத்தை சேர்ந்த ஜிபன் சந்தரா டெப்நாத், 29, என்ற இளைஞர் கூடுவாஞ்சேரி ரயில் நிலையம் அருகே, 21 கிலோ கஞ்சாவுடன் போலீசாரிடம் சிக்கினார்.
மேற்கண்ட அனைவரும், சென்னை, புறநகர் பகுதியில் வசிக்கும் கூலிதொழிலாளிகளை மையப்படுத்தியே, கஞ்சாவை கடத்தி விற்க முயன்றுள்ளது விசாரணையில் தெரியவந்தது.
சென்னை நகரத்தை மையப்படுத்தி நடந்து வந்த கஞ்சா விற்பனை, இப்போது புறநகர் பகுதியை குறிவைத்து, நகர துவங்கியிருப்பது, அப்பகுதி மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:
தமிழகத்தில் விற்கப்படும் கஞ்சா, பெரும்பாலும் வட மாநிலங்களிலிருந்து, ரயில் வாயிலாகவே கடத்தி வரப்படுகிறது. இதற்கு துணையாக வடமாநில இளைஞர்கள் பயன்படுத்தப்படுகின்றனர்.
இதில், அதிக லாபத்திற்கு ஆசைப்படும் வட மாநில இளைஞர்கள், அவர்களே ரயிலில் கஞ்சா கடத்தி, நேரடி விற்பனையில் ஈடுபடுகின்றனர். இவர்களின் வாடிக்கையாளர்களாக சென்னையின் புறநகர் பகுதிகளில் வசிக்கும் கூலிதொழிலாளர்கள் உள்ளனர்.
வடமாநிலம்
முக்கியமாக, தாம்பரம், கூடுவாஞ்சேரி மற்றும் சுற்றுப் பகுதியில், 10 லட்சத்திற்கும் அதிகமான கூலித் தொழிலாளர்கள் வசிக்கின்றனர்.
இவர்களில், வட மாநிலத்தை சேர்ந்தவர்களும் கணிசமான அளவில் உள்ளனர்.
குறைந்த செலவில் உச்ச போதை, வாகனத்தில் சென்றாலும், போலீசாரின் சோதனைகளில் சிக்கல் இல்லாது தப்பித்தல், மொத்தமாக வாங்கி வைத்து, சில்லரையாக விற்று வருமானம் பார்ப்பது உள்ளிட்ட காரணங்களால், கஞ்சா போதைக்கு ஆட்பட்டவர்களும், அதை விற்கத் துவங்கி உள்ளனர்.
கஞ்சா விற்பனையில் ஈடுபடுவோர், ஏற்கனவே பல வழக்குகளில் தொடர்புடைய முன்னாள் குற்றவாளிகளாக உள்ளனர். இவர்கள் சிறையிலிருந்து மீண்டும் வெளியே வராதபடி, கடுமையான தண்டனை வழங்க வேண்டும்.
தவிர, வடமாநிலங்களிலிருந்து வரும் அனைத்து ரயில்களிலும், மோப்ப நாய் உதவியுடன் சோதனை நடத்தப்பட வேண்டும்.
மது அருந்திய பின், வாகனம் ஓட்டுவோரிடம் அபராதம் வசூலிப்பதுபோல், கஞ்சா உள்ளிட்ட இதர போதை வஸ்துகளை நுகர்ந்து வரும் வாகன ஓட்டிகளை கண்டறிந்து, அவர்களுக்கும் கடுமையான தண்டனை வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நமது நிருபர்-