/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சோழிங்கநல்லுார் - மேடவாக்கம் மெட்ரோ மேம்பால பணி துவக்கம்
/
சோழிங்கநல்லுார் - மேடவாக்கம் மெட்ரோ மேம்பால பணி துவக்கம்
சோழிங்கநல்லுார் - மேடவாக்கம் மெட்ரோ மேம்பால பணி துவக்கம்
சோழிங்கநல்லுார் - மேடவாக்கம் மெட்ரோ மேம்பால பணி துவக்கம்
ADDED : ஏப் 29, 2024 04:13 AM

சென்னை, : மாதவரம் - சோழிங்கநல்லுார் மெட்ரோ ரயில் தடத்தில் மேடவாக்கம், பெரும்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மேம்பாலம் அமைக்கும் பணிகள் துவக்கப்பட்டு உள்ளன.
சென்னையில் இரண்டாவது கட்டத்தில், மொத்தமுள்ள மூன்று வழித்தடங்களில் சோழிங்கநல்லுார் - மாதவரம் வழித்தடத்தில் ரெட்டேரி சந்திப்பு, வில்லிவாக்கம், வளசரவாக்கம், போரூர், ஆலந்துார், ஆதம்பாக்கம், வாணுவம்பேட்டை, புழுதிவாக்கம், மடிப்பாக்கம், கீழ்க்கட்டளை, மேடவாக்கம் சந்திப்பு, பெரும்பாக்கம் வழியாக அமைகிறது.
இந்த தடத்தில் பெரும்பாலும் மேம்பாலம் பாதை வழியாக அமைவதால், பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. ஏற்கனவே, பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ள 300க்கும் மேற்பட்ட துாண்களில், மேம்பாலம் அமைக்கும் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளன.
இதற்கிடையே, ஏற்கனவே நிறுவப்பட்டுள்ள துாண்களில் மேம்பாலம் அமைக்கும் பணிகள் துவக்கப்பட்டுள்ளன. ரெட்டேரி, கொளத்துாரைப் போல் மேடவாக்கம், பெரும்பாக்கம் பகுதிகளில், இந்த பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.
இதுகுறித்து, சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:
இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், மாதவரம் - சோழிங்கநல்லுார் தடத்தில், 44.6 கி.மீ., துாரத்தில் பெரும்பாலான மேம்பால பாதையில் மெட்ரோ ரயில் பாதை அமைகிறது.
இந்த பணிகள் தாமதமின்றி முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. ரெட்டேரி, கொளத்துார், மேடவாக்கம், பெரும்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில், துாண்களில் மேம்பாலப் பாதை அமைக்கும் பணிகள் நடைபெறுகின்றன.
இதற்காக, பிரத்யேக கனரக இயந்திரங்களை கொண்டு, துாண்களில் மீது பாலங்களை பாதுகாப்பாக அமைக்கும் பணிகள், அடுத்த ஏழு மாதங்கள் வரை நடைபெறும். ஏற்கனவே திட்டமிட்டபடி, இந்த தடத்தில் 2027 முதல் மெட்ரோ ரயில் சேவை படிப்படியாக துவக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
சென்னையில், இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம், 116 கி.மீ., துாரத்தில் மூன்று வழித்தடங்களில் பணிகள் நடைபெற்று வருகின்றன. இரண்டாம் கட்ட மெட்ரோ திட்டத்தில், 300 வளைவுகளில் மெட்ரோ ரயில் பாதைகள் இடம்பெற உள்ளன.
அதாவது, 116.1 கி.மீ.,யில் 50 கி.மீ., வரை வளைவுகளில் பாதைகள் இடம்பெற உள்ளன. இவற்றில் 16 கி.மீ., வரை கூர்மையான வளைவுகளில் பாதைகள் அமைக்கப்பட உள்ளன. இவற்றில் கூர்மையான வளைவு பாதையாக, ஆலந்துார் அருகே கத்திப்பாராவில், 125 மீட்டர் சுற்றளவில் அமைகிறது.
மாதவரம் பால் பண்ணை -- சிறுசேரி சிப்காட் வழித்தடத்தில் 116 வளைவுகளும், கலங்கரை விளக்கம் -- பூந்தமல்லி வழித்தடத்தில் 73 வளைவுகளும், மாதவரம் -- சோழிங்கநல்லுார் வழித்தடத்தில் 111 வளைவுகளும் உள்ளன.
மடிப்பாக்கம், போரூர், ஆழ்வார்திருநகர், ஆலப்பாக்கம் மற்றும் மஞ்சம்பாக்கம் போன்ற பகுதிகளை இணைக்கும் வழித்தடங்களில், கூர்மையான வளைவுகள் கட்டப்படுகின்றன என, சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

