/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
செங்கை மேற்கு அ.தி.மு.க., சார்பில் சிட்லப்பாக்கம் ஏரியில் துாய்மை பணி
/
செங்கை மேற்கு அ.தி.மு.க., சார்பில் சிட்லப்பாக்கம் ஏரியில் துாய்மை பணி
செங்கை மேற்கு அ.தி.மு.க., சார்பில் சிட்லப்பாக்கம் ஏரியில் துாய்மை பணி
செங்கை மேற்கு அ.தி.மு.க., சார்பில் சிட்லப்பாக்கம் ஏரியில் துாய்மை பணி
ADDED : பிப் 26, 2025 11:51 PM

சிட்லப்பாக்கம், பிப். 27-
கடந்த அ.தி.மு.க., ஆட்சியின் போது, சுற்றுச்சூழல் துறை சார்பில், 25 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு, சிட்லப்பாக்கம் பெரிய ஏரியில் புனரமைப்பு பணி, 2019ல் துவங்கியது.
ஏரியில் இருந்த கழிவுகள் வெளியேற்றப்பட்டு, துார் வாரி ஆழப்படுத்தப்பட்டது. கான்கிரீட் கற்களால் கரை பலப்படுத்தப்பட்டு, நடைபாதை அமைக்கப்பட்டது.
தொடர்ந்து, கரையில், 32 லட்சம் ரூபாய் செலவில், சிறுவர் விளையாட்டு திடல் அமைக்கப்பட்டுள்ளது. கரையில் மரங்கள் நடப்பட்டு பராமரிக்கப்படுகின்றன.
இறகுப்பந்து மற்றும் கைப்பந்து மைதானங்கள் கட்டப்பட்டுள்ளன. அதன்பின் பணியில் தொய்வு ஏற்பட்டது.
ஆனால், பச்சைமலையில் இருந்து ஏரிக்கு மழைநீர் வருவதற்கான ஏற்பாடு, சாக்கடை கழிவு கலப்பதை தடுத்தல் உள்ளிட்ட, 30 சதவீத பணிகள் இன்னும் முடிக்கப்படாமல் உள்ளன.
தி.மு.க., அரசு, இவ்வேரி புனரமைப்பு பணியில் அக்கறை காட்டவில்லை எனக்கூறி, சில மாதங்களுக்கு முன், செங்கல்பட்டு மேற்கு மாவட்ட அ.தி.மு.க., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இந்நிலையில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு, செங்கல்பட்டு மேற்கு மாவட்ட எம்.ஜி.ஆர்., இளைஞர் அணி சார்பில், இவ்வேரியில் படர்ந்துள்ள ஆகாய தாமரை அகற்றும் பணி, கடந்த ஒரு வாரமாக நடந்து வந்தது.
மாவட்ட அ.தி.மு.க., செயலர் சிட்லப்பாக்கம் ராஜேந்திரன் தலைமையில், மாவட்ட எம்.ஜி.ஆர்., இளைஞர் அணி செயலர் புருஷோத்தமன், 34வது வார்டு கவுன்சிலர் சுபாஷினி ஆகியோர், தனது சொந்த நிதி, 7 லட்சம் ரூபாயை கொண்டு, ஏரியை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
தினசரி, 10க்கும் மேற்பட்டோர் படகு வாயிலாக ஏரியில் படர்ந்திருந்த ஆகாய தாமரையை அகற்றி சுத்தம் செய்தனர்.

