
செங்கல்பட்டு பேருந்து நிலையத்தில்
செயல்படாத ஏ.டி.எம்., இயந்திரம்
செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையம் அருகில், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் ஏ.டி.எம்., இயந்திரம் உள்ளது. இதில், பேருந்து நிலையம் வரும் பயணியர் மற்றும் பொதுமக்கள், அவசர தேவைக்கு பணம் பெற்று பயனடைந்தனர்.
சில நாட்களாக, இந்த ஏ.டி.எம்., இயந்திரம் செயல்படவில்லை. இதனால், பேருந்து நிலையத்திற்கு வரும் பயணியர் மற்றும் மருத்துவமனைக்கு செல்லும் பொதுமக்கள், மிகுந்த சிரமம் அடைந்து வருகின்றனர்.
இதுகுறித்து வங்கி நிர்வாகத்திற்கு புகார் தெரிவித்தும், இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, பேருந்து நிலையத்தில் உள்ள ஏ.டி.எம்., இயந்திரத்தை சீரமைக்க, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- சீனிவாசன், செங்கல்பட்டு.
எப்போதும் பூட்டியே கிடக்கும்
கருநிலம் இ - சேவை மையம்
காட்டாங்கொளத்துார் ஒன்றியம், கருநிலம் ஊராட்சியில், சமுதாயக் கூடம் அருகே, கிராம இ -- சேவை மைய கட்டடம் உள்ளது. இந்த இ -- சேவை மையம் அடிக்கடி பூட்டப்பட்டு உள்ளதால், சுற்றியுள்ள கிராம மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.
பட்டா, ஜாதி, வருமானம், இருப்பிட சான்றிதழ்கள் விண்ணப்பிக்க, தனியார் இ -- சேவை மையத்தை, அதிக கட்டணம் கொடுத்து நாட வேண்டி உள்ளது. எனவே, இந்த இ -- சேவை மையத்தை தினசரி திறந்து பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும்.
மேலும், சாலையை விட சற்று தொலைவில் உள்ளதால், முதியவர்களுக்கு இ -- சேவை மையம் இருப்பது, அடையாளம் தெரிவதில்லை. எனவே, சாலை அருகில் அறிவிப்பு பலகை வைக்கவும், துறை சார்ந்த அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- எம்.பூபாலன், கோவிந்தாபுரம்.
சிறிய தாங்கல் ஏரியில் தேங்கியுள்ள
ஆகாயத்தாமரை அகற்றப்படுமா?
நந்திவரம்- - கூடுவாஞ்சேரி நகராட்சி பேருந்து நிலையம் பின்புறம், சிறிய தாங்கல் ஏரி உள்ளது. இதில், எப்போதுமே மழைநீர் தேங்கி நிரம்பி இருக்கும். அதனால், இந்த ஏரி, சுற்றுவட்டார பகுதிகளின் நிலத்தடி நீர்மட்டம் உயர்வதற்கு காரணமாக உள்ளது.
தற்போது, இந்த ஏரியில் ஆகாயத்தாமரை செடிகள் அதிக அளவில் பரவியுள்ளன. அவற்றை அகற்றி, ஏரியை துார்வாரி, சுற்றியுள்ள கரையை சீரமைக்க, நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- அகிலன், நந்திவரம்.
கந்தசுவாமி கோவில் வளாகத்தில்
அகற்றப்படாத குப்பை கழிவுகள்
திருப்போரூர் கந்தசுவாமி கோவிலின் வெளிப்புற வளாகத்தில், தென் கிழக்கு பகுதியில் குப்பை கொட்டப்படும் இடம் உள்ளது. இங்கு, பல மாதங்களாக கோவில் மற்றும் சுற்றியுள்ள உணவகம், வணிக கடைகளிலிருந்து வெளியேறும் குப்பை கழிவுகள் கொட்டப்படுகின்றன. அவற்றை, பேரூராட்சி நிர்வாக துாய்மை பணியாளர்கள் தினசரி அகற்றி வருகின்றனர்.
எனினும், குப்பை அகற்றப்படாத சில நாட்களில், அங்கு துர்நாற்றம் வீசுவதுடன், அங்கு குப்பை கொட்டும் இடமாக இருப்பது, கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு முகச்சுளிப்பை ஏற்படுத்துகிறது.
எனவே, குப்பை கொட்டும் இடத்தை வேறு இடத்திற்கு மாற்றி, கோவில் பகுதியில் குப்பைத்தொட்டி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- ரமணன், திருப்போரூர்.