
குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை பழுது நீக்க எதிர்பார்ப்பு
மறைமலை நகர் நகராட்சி, பல்லவன் தெருவில் விண்ணகரம் சர்ச் பின்புறம், நகராட்சி சார்பில் அமைக்கப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலையம், பல ஆண்டுகளாக பழுதடைந்து உள்ளது.
இதன் காரணமாக, இப்பகுதிவாசிகள் அருகில் உள்ள மற்ற தெருக்களுக்கு சென்று, தண்ணீர் பிடித்து வர வேண்டிய நிலை உள்ளது. அதனால், இரு தெருவாசிகளிடையே அடிக்கடி வீண் சச்சரவுகள் ஏற்படுகின்றன.
எனவே, பல ஆண்டுகளுக்கு முன் பழுதாகி, பயன்பாடின்றி உள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை பழுது நீக்க, நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- எஸ்.பசுபதி, மறைமலை நகர்.
சாலை ஓரத்தில் பள்ளம்
சீரமைக்க வலியுறுத்தல்
மதுராந்தகம் அருகே சென்னை -- திருச்சி தேசிய நெடுஞ்சாலையோரம், திண்டிவனம் மார்க்கத்தில் பெரிய பள்ளம் உள்ளது. மழைநீர் விரைந்து வெளியேறும் வகையில், சாலையோரம் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது.
அந்த கால்வாய் பகுதியில், மழை நீர் செல்ல முடியாதவாறு, தற்போது மண் துார்ந்து புற்கள் வளர்ந்துள்ளன.
மதுராந்தகம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், வட்டாட்சியர் அலுவலகம், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு என, நாள்தோறும் நுாற்றுக்கணக்கானோர், இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த சாலையில் உள்ள பள்ளத்தை சீரமைக்க, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுவரை எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. எனவே, சாலையோர பள்ளத்தை சீரமைக்க, அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் எதிர்பார்க்கின்றனர்.
- மகேஷ், மதுராந்தகம்.
போக்குவரத்து சிக்னல் பழுது
வண்டலுாரில் விபத்து அபாயம்
காட்டாங்கொளத்துார் ஒன்றியம், வண்டலுார் அண்ணா உயிரியல் பூங்கா அருகில், போக்குவரத்து சிக்னல் உள்ளது. பழுதான இந்த சிக்னல், சில நாட்களாக இயங்கவில்லை.
இதனால், தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டு நோக்கி வரும் வாகனங்களும், செங்கல்பட்டில் இருந்து தாம்பரம் நோக்கி வரும் வாகனங்களும், இந்த இடத்தில் அத்துமீறி செல்கின்றன.
மேலும், போதிய அளவில் போக்குவரத்து போலீசார் இல்லாததால், சிக்னலில் விதிமீறி செல்லும் வாகனங்களால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
எனவே, பழுதாகி, இயங்காமல் உள்ள சிக்னலை சீரமைக்க, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- கே.சாந்தி, வண்டலுார்.
சாலை வளைவில் பள்ளம்
வாகன ஓட்டிகள் தடுமாற்றம்
காட்டாங்கொளத்துார் ஒன்றியம், வில்லியம்பாக்கம் - சாஸ்திரம்பாக்கம் சாலை, 5 கி.மீ., துாரம் உடையது.
இந்த சாலையில் உள்ள டாஸ்மாக் கடை அருகில், சாலை வளைவில் சேதமடைந்து பள்ளம் ஏற்பட்டு உள்ளது. இந்த சாலையில், விளக்குகள் இல்லாததால் வாகன ஓட்டிகள் தடுமாறி கீழே விழுகின்றனர்.
எனவே, சாலையில் உள்ள இந்த பள்ளத்தை சீரமைக்க, துறை சார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- கே.மணி, செங்கல்பட்டு.
பொலம்பாக்கம் பள்ளி எதிரே
வேகத்தடை அமைக்கப்படுமா?
சித்தாமூர் அருகே பொலம்பாக்கம் கிராமத்தில், அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு, 500க்கும் மேற்பட்ட மாணவ- - மாணவியர் படித்து வருகின்றனர்.
பள்ளி எதிரே, செய்யூர் - சோத்துப்பாக்கம் சாலையில் வேகத்தடை இருந்தது. சாலை விரிவாக்கத்திற்காக வேகத்தடை அகற்றப்பட்டது.
சாலை விரிவாக்கப் பணிகள் முடிந்துள்ள நிலையில் , பள்ளி எதிரே வேகத்தடை அமைக்கப்படாமல் உள்ளதால், கனரக வாகனங்கள் அதிவேகத்தில் செல்கின்றன.
ஆகையால், துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து, பள்ளி எதிரே வேகத்தடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- ச.சந்தோஷ்குமார், சித்தாமூர்.
செங்கை ரயில் நிலையம் முன்
ஆக்கிரமித்துள்ள டூ - வீலர்கள்
செங்கல்பட்டு ரயில் நிலையம் முன், பயணியருக்கு இடையூறாக, அதிக அளவில் வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. ரயில் நிலைய நுழைவாயில் முன்பு மற்றும் டிக்கெட் கவுன்டர் அருகில் என, இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.
இது, ரயில் நிலையம் வரும் பயணியருக்கும், ரயில் நிலையத்தில் இருந்து வெளியேறும் பயணியருக்கும் சிரமமாக உள்ளது. குறிப்பாக, பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியோர் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.
இதுகுறித்து, ரயில்வே துறை அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தும், இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. ரயில் நிலையத்திற்கு, ஒற்றையடி பாதையில் செல்லும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.
அதனால், ரயில் நிலையம் முன் நிறுத்தப்பட்டுள்ள இருசக்கர வாகனங்களை அகற்ற, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- எஸ்.சீனிவாசன், செங்கல்பட்டு.